IVF - In Vitro Fertilization - இன் விட்ரோ கருத்தரித்தல் என்று அழைக்கப்படும் இது கருவுறாமைக்கு செய்யப்படும் சிகிச்சை. விந்தணுக்களையும் பெண்ணின் முட்டையையும் வெளியே எடுத்து கருமுட்டையாக உருவாக்கும் சிக்கலான செயல்முறை இந்த ஐவிஎஃப் - IVF.
ICSI - Intracytoplasmic Sperm Injection என்பது ஆண் மலட்டுத்தன்மைக்கான சிகிச்சை. ஆய்வகத்தில், முட்டைகளில் நேரடி விந்தணுக்களை செலுத்தும் முறை.
கருவுறாமைக்கான சிகிச்சையில் இவற்றின் பங்கு என்ன என்பதை விளக்குகிறார் Dr. Mala Raj, FIRM Hospitals, Chennai.
கருவுறாமை சிகிச்சை எப்போது தேவை?
பெண்ணின் முட்டை ஆணின் விந்து இரண்டும் இணைந்து கருமுட்டையாக மாறி கர்ப்பப்பையில் வந்து உட்கார வேண்டும். இது இயல்பான கருத்தரிப்பில் நடக்க கூடிய ஒன்று. ஆனால் கருவுறாமையில் முட்டையும், விந்தணுக்களும் சேராமல் இருப்பது தான் பிரச்சனையே. விந்துவும் முட்டையும் சேர வைப்பதுதான் IVFமற்றும் ICSI.
IVF முறை கருத்தரிப்பு எப்போது முடிவு செய்யப்படுகிறது?
தம்பதியர் கருத்தரிப்பு சிக்கல் என்று வந்த உடன் அவர்களுக்கு ஐவிஎஃப் முடிவு செய்துவிட மாட்டோம். முதலில் தம்பதியர் இருவருக்கும் முறையான உடல் பரிசோதனை செய்து, (பெண்கள் எனில் - இரத்த பரிசோதனை, ஸ்கேன், AMH- ஹார்மோன் பரிசோதனை, ஆண்களுக்கு - இரத்தப்பரிசோதனை, முழுமையான விந்தணுக்கள் பரிசோதனை போன்றவை செய்யப்படும்) பரிசோதனையின் முடிவில் தம்பதியரில் யாருக்கு பிரச்சனை, என்ன மாதிரியான சிகிச்சைகள் தேவைப்படும் என்பது குறித்து கூர்மையாக ஆராயப்படும். அவர்களுக்கு முட்டை, விந்து சேர்வதில் பிரச்சனை என்னும் நிலைக்கு வரும் போது இந்த ஐவிஎஃப் சிகிச்சை முடிவு செய்யப்படும். இவற்றில் இரண்டு வகை உண்டு ஒன்று ஐவிஎஃப்- IVF மற்றொன்று ICSI இக்ஸி.
IVF மற்றும் ICSI (இக்ஸி) இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
இவை இரண்டுக்கும் செயல்முறை என்பது ஒன்று தான். சிறிய வித்தியாசம் தான். ஐவிஎஃப் செயல்முறையில் பெண்ணின் கருமுட்டை எடுத்து ஆய்வகத்தில் உரிய முறையில் வைக்கப்படும். அதன் அருகில் ஆணின் விந்து எடுத்து வைக்கப்படும். இந்த விந்தணுவே பெண்ணின் முட்டைக்குள் சென்று கருமுட்டையாக உருவாவது தான் ஐவிஎஃப் செயல்முறை.
இக்ஸி முறை என்றால் பெண்ணின் முட்டையின் அருக்கில் விந்தணு வைக்காமல் நேரடியாக முட்டைக்குள் செலுத்தப்படும். ஏனெனில் சில விந்தணுக்கள் தாமாகவே முட்டைக்கு சென்று கருவாக மாறும் திறன் இல்லாமல் இருக்கும். இதனால் கரு உருவாகாது. இந்த பிரச்சனை வராமல் தடுக்கவே நேரடியாக முட்டைக்குள் விந்தணு செலுத்தப்படுகிறது. இதுதான் இக்ஸி செயல்முறை ஆகும்.
IVF மற்றும் ICSI (இக்ஸி) செயல்முறையில் எது வெற்றி அளிக்கும்?
கருவுறாமை சிகிச்சைக்கு ஐவிஎஃப் தான் தீர்வு என்றால் இக்ஸி முறை வெற்றியை கொடுக்கும் என்று சொல்லாம். ஏனெனில் முட்டையை தேடி விந்தணுக்கள் செல்வதில் இருக்கும் பிரச்சனையில்லாமல் முட்டைக்குள் விந்தணு சேர்த்து வைக்கப்படுகிறது. எங்களிடம் கருவுறாமை சிகிச்சைக்கு வருபவர்கள் வெற்றிகரமாக கருத்தரிக்க இதுவும் ஒரு காரணம்.
கருவுறாமைக்கு ஐவிஎஃப் சிகிச்சை முறைகள்?
பெண்ணின் மாதவிடாய் நாளில் இரண்டாவது நாளில் இருந்து ஊசி போடப்படும். தினமும் ஊசி போட்டு சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்து முட்டையின் வளர்ச்சி சரிபார்க்கப்படும். முட்டை வளர்ந்ததும் அவை நன்றாக முதிர்ச்சி அடைய ஓர் ஊசி போடப்படும். பிறகு அனஸ்தீசியா கொடுத்து அந்த முட்டை வெளியே எடுக்கப்படும்.
ஆணின் விந்தணுவை எடுத்து அதை இந்த முட்டைக்குள் செலுத்தப்படும். பிறகு கர்ப்பப்பை போன்ற வெப்பநிலையில் ஆய்வகத்தில் இன்குபேட்டரில் வைக்கப்படும். கரு கர்ப்பப்பையில் பதிவது போன்ற அமைப்புடனும் சூழலுடனும் இவை இருக்கும். இந்த இன்குபேட்டரில் இவை வளர தொடங்கும். 4-5 நாட்கள் வளரவிட்டு ஃப்ரீஸ் செய்து ஒரு மாதம் வரை வைத்திருக்க வேண்டும்.
அடுத்த மாதம் மாதவிடாய் நாளில் இரண்டாவது நாளில் கர்ப்பப்பை சவ்வு வலுப்படுத்த மாத்திரை கொடுக்கப்படும். எண்டோமெட்ரியம் நன்றாக வளர்ந்த பிறகு ஃப்ரீஸ் செய்து வைத்த கருமுட்டையை கர்ப்பப்பையில் பொருத்த வேண்டும். இதுதான் இக்ஸி முறை. IVF மற்றும் ICSI இக்ஸி செயல்முறை என்பது ஒன்று தான். ஆனால் இக்ஸிக்கு நேரடியாக ஊசி மூலம் செலுத்தப்படும்.
கரு உறுதியாக செய்ய வேண்டியது என்ன?
கருவை கர்ப்பப்பையில் பொருத்தி, அவர்களுக்கு இரண்டு வாரங்கள் வரை ஓய்வு கொடுக்கப்படும். இடையில் ஹார்மோன் சீராக செயல்பட மாத்திரைகள் கொடுக்கப்படும். இரண்டு வாரங்களுக்கு பிறகு இரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை செய்து கரு உறுதி செய்யப்படும். மீண்டும் இரண்டு வாரங்கள் அவர்களை கவனமாக இருக்க சொல்லி பிறகு ஸ்கேன் பரிசோதனை செய்து குழந்தையின் இதயத்துடிப்பு போன்றவை சரிபார்க்கப்படும். இத்தகைய செயல்முறையை அனுபவமிக்க வல்லுநர்களிடம் செய்யும் போது வெற்றிகரமான கருத்தரிப்பு சாத்தியம்.