Hema committee report 
மங்கையர் மலர்

ஹேமா கமிட்டி அறிக்கையால் அதிர்ந்து போன மலையாளத் திரை உலகம்!

தா.சரவணா

கேரளாவில் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கையால் கேரளா திரைப்பட உலகம் கடும் அதிர்ச்சியை சந்தித்துள்ளது.

பெண்களுக்கு, குறிப்பாக திரைத்துறையில் பணியாற்றி வரும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய 5 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் ஹேமா கமிட்டி நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் அறிக்கை சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அது மொத்தம் 235 பக்கங்களைக் கொண்டதாகும். இதில் 51 பெண்களிடம் ஆய்வு செய்யப்பட்ட வகையில், திரைத்துறை சார்ந்த பல பெண்கள் கொடுத்துள்ள வாக்குமூலங்கள் பகிர் ரகமாக உள்ளன.

அதாவது கேரளா சினிமா துறையில் பணியாற்றி வரும் பெண்கள் குறிப்பாக  ஹீரோயின் முதல் சாதாரண பணியாளர்கள் வரை பாலியல் அத்துமீறல்களை சந்தித்து வருகின்றனர். இதில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தை இங்கு பிரபலமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு நடிகை அல்லது துணை நடிகை சினிமா தயாரிப்பாளர், இயக்குனர் அல்லது நடிகர் யாருடனாவது அவர்கள் கேட்கும் விஷயத்தை சேர்த்து செய்ய ஒத்துக் கொண்டால் அவர்களுக்கு தொடர்ந்து பணி வாய்ப்புகள் வழங்குவது இங்கு வாடிக்கையாக இருந்துள்ளது. அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துழைக்காத பெண்களுக்கு கழிவறைகள் கூட ஒதுக்கப்படாமல் இருந்துள்ளது. அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் காம்ப்ரமைஸ் செய்யும் நடிகைகள் என்ன கேட்டாலும் செய்து கொடுக்க மலையாள திரை உலகம் தயாராக இருந்துள்ளது.

இதில் சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்கள் நிலை தான் படுமோசமானது. அதாவது அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்பது ஒரு புறம் இருக்க... அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டாலும் அந்த திரைப்படம் வெளியிடப்படுமா? வெளியிடப்பட்டாலும் வெற்றி வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறி தான். இதனால் புதிதாக வாய்ப்பு தேடி வரும் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலையில் மலையாள திரைப்பட உலகில் உள்ளனர்.

இந்திய அளவில் கேரள மாநிலம் 100% படிப்பறிவு உள்ள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட மாநிலத்திலேயே இது போன்று பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பகிரங்கமாக நடந்து வருவது பலரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று தங்களுக்கு என்ன தான் வசதி வாய்ப்புகள் இதன் மூலம் கிடைத்தாலும் அதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்வது என்பது மிகவும் மோசமான காரியம் என்பதை மலையாள பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்களின் வயிற்றுப் பாட்டுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு பிழைப்பை நாடிச் செல்லும் பெண்கள் மத்தியில் ஆண்கள் மேல் மட்டும் குற்றம் சாட்டுவது நியாயமாக தென்படவில்லை.

ஒரு பெண்ணுக்கு இது போன்ற பாலியல் தொந்தரவுகள் அளித்தால் அவர்கள் உடனடியாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அப்படி எதிர்ப்பு தெரிவித்தால் இது போன்ற பிரச்னைகள் மெல்ல மெல்ல குறைந்து போகும்.

இந்த ஹேமா கமிட்டி அறிக்கை என்பது, மலையாளத் திரையுலையின் முகத்திரையை மட்டும் கிழித்து தொங்கவிடவில்லை. உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் தொந்தரவுகள் குறித்த விசாரணைக்கு தொடக்க சாவு மணி அடித்துள்ளது. அதனால் பெண்கள் தங்களுக்கு பாலியல் சீண்டல் தொந்தரவு இருந்தால் உடனடியாக ஏதோ ஒரு வகையில் தங்களின் எதிர்ப்பை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். மலையாள திரை உலகில் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அடங்கிப் போகாத நடிகைகள் சூட்டிங் நடக்கும் இடங்களில் தங்களின் குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்புக்காக வரவழைப்பது வழக்கமாக உள்ளது என்றும் இந்த அறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இனிமேலாவது ஆண்கள் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் விவகாரங்களில் மூக்கை நுழைக்காமல் தங்கள் வீட்டுப் பெண்களாக அதாவது அக்காள், தங்கை, தாய் போன்ற உறவுகளில் வைத்து மரியாதை செய்வது நலம் பயக்கும். இல்லையென்றால் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப பொதுவெளியில் அசிங்கப்பட நேரிடும்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT