தென்னிந்திய மக்களின் பிரதான உணவுப் பொருளாக இருப்பது அரிசி. சந்தையில் சமீப காலமாக அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரிசி விலை உயர்வதன் காரணம் என்ன? இதனால் யாருக்கு பாதிப்பு என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
அரிசியின் விலை நாளுக்கு நாள் உச்சத்தைத் தொடுகிறது. தற்போதைய நிலையில் புழுங்கல் அரிசி ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.76 வரை விற்பனையாகிறது. பச்சரிசி ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனையாகிறது. இந்த விலையேற்றம் ஏழை எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அரிசி உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உற்பத்தி குறைவது தான் முதல் காரணமாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஒரு பொருளின் உற்பத்தி குறையும் போது, சந்தையில் அப்பொருளின் விலை அதிகமாக இருக்கும். அதே போல் தான் அரிசியின் விலையும் உயர்வதாக வணிகர்கள் கூறுகின்றனர். மேலும் பிராண்டுகளுக்கு ஏற்பவும் அரிசி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதாவது அரிசியின் தரம் பிராண்டைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. சில பிராண்டுகளில் அரிசியின் ஆரம்ப விலையே ரூ.70 தான் என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
சன்ன ரகம் மற்றும் மோட்டா ரகம் என இரு வகையான அரிசிகள் இருந்தாலும், சன்ன ரகத்தையே பெரும்பாலும் மக்கள் பயன்படுத்துகின்றனர். நெல் சாகுபடி பரப்பளவு குறைவது, அதிக உற்பத்தி செலவு, வேலையாட்களின் ஊதிய உயர்வு, மின் கட்டண உயர்வு, சரக்கு மற்றும் சேவைகள் கட்டணம் (ஜிஎஸ்டி உள்பட) ஆகியவற்றின் தாக்கம் தான் அரிசியின் விலையில் எதிரொலிக்கின்றன.
இரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் கூட இந்தியாவில் அரிசி விலையின் உயர்வுக்கு ஒரு காரணமாக அமைந்தது. எங்கோ ஓரிடத்தில் போர் நடந்தால் இந்தியாவில் ஏன் அரிசி விலை அதிகரிக்க வேண்டும் என சாதாரண மக்கள் நினைப்பதுண்டு. ஆனால், அங்கு நடந்த போரினால் உயர் சன்ன ரக அரிசியை மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது இந்தியா. இதனால் கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையில் அரிசி விலை உச்சத்தில் இருந்தது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குப் பின் தான் அரிசி விலை ஓரளவு கட்டுக்குள் வந்தது.
இப்போது அரிசியின் மொத்த விலையில் பெரிதாக மாற்றம் இல்லை. இருப்பினும் டீசல் உயர்வால் போக்குவரத்து செலவு அதிகரிப்பு, மின் கட்டண உயர்வு, அரிசி ஆலைகளில் வேலை செய்ய வடமாநிலத் தொழிலாளர்களின் வருகை, ஏற்று கூலி மற்றும் இறக்கு கூலி ஆகியவற்றால் அரிசியின் சில்லறை விலையில் தான் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது அன்றாட வாழ்க்கையை நடத்தும் நடுத்தர வர்க்கத்தினர் தான். நெல் சாகுபடி குறைந்து வரும் இன்றைய நிலையில், உணவை வீணாக்காமல் இருப்பது தான் புத்திசாலித்தனம்.