Udan kattai eruthal 
மங்கையர் மலர்

சதிக்கல் வழிபாடு - நெருப்பில் பாய்ந்த பெண்கள் - என்ன கொடுமையடா சாமி!

தேனி மு.சுப்பிரமணி

இறந்து விட்ட கணவன் உடல் எரிக்கப்படும் போது, அந்த நெருப்பில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் மனைவி மற்றும் அக்கணவன் என்று இருவரின் நினைவாகும் நடப்படும் கல்லை ‘சதிக்கல்’ என்கின்றனர். இக்கல்லை தமிழ்நாட்டில் மகாசதிக்கல் என்றும், பேச்சு வழக்கில் மாஸ்திக்கல் என்றும் சொல்கின்றனர். கேரளத்தில் இக்கல்லை புலைச்சிக்கல் அல்லது படைக்கல் என்றும், கர்நாடகத்தில் தோள் கொடுத்தல் என்றும் சொல்கின்றனர்.

வட இந்தியாவில், கணவன் இறந்த பின்பு, அவனது உடலை எரிக்கும் நெருப்பில், அவன் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் எளிய மக்களிடமும் இருந்து வந்தது. ஆனால், தென்னிந்தியப் பகுதிகளில் அரசர், அமைச்சர் மற்றும் படைத்தலைவர் போன்ற உயர் பணிகளிலிருந்தவர்களது குடும்பங்களில் மட்டுமே இருந்தது. இவ்வாறு நெருப்பில் பாய்ந்து இறந்த பெண்களைத் தெய்வமாகக் கருதி வழிபடும் நோக்கில் சதிக்கல் நடப்பட்டது.

ணவன் இறந்த பின்பு, நெருப்பில் பாயும் பெண் எப்படி இருக்க வேண்டும்? என்று சில மரபுகள் பின்பற்றப்பட்டிருக்கின்றன. அதாவது, நெருப்பில் பாயும் பெண் நோய்வாய்ப்பட்டவளாக இருக்கக் கூடாது. கணவன் இறந்த பிறகு, இப்படி இறந்து விட்டானே என்ற வருத்தம், நெருப்பில் பாயும் அப்பெண்ணிற்கு இருக்கக் கூடாது. பதினாறு வயதிற்கு உட்பட்ட சிறு பெண்ணாக இருக்கக் கூடாது. அவளாக விரும்பி நெருப்பில் பாய வேண்டும். மற்றவர்கள் யாரும் கட்டாயப்படுத்தி, துன்புறுத்தி நெருப்பில் பாய்ந்து இறக்க வலியுறுத்தக் கூடாது. கட்டாயப்படுத்தித் துன்புறுத்தினால் அது கொலைக்கு சமமாகவும், அது அதர்மமாகவும் கருதப்பட்டது.

னைத்துச் சமூகத்திலும் நெருப்பில் பாயும் வழக்கம் இருந்துள்ளது. கணவன் (வீரன்) இறந்து பத்து நாட்கள் முதல் இருபது நாட்கள் வரை, மனைவி நெருப்பில் பாய்ந்து உயிரை விடலாம் என்கின்றனர். வைசியப் பெண்கள் என்றால் பதினாறு நாட்கள். மற்றவர்களுக்கு இருபது நாட்கள் என்கிற காலவரையறையும் இருந்தது.

கணவன் இறந்து பத்து முதல் இருபது நாட்களுக்குள் எனும் கால வரையறையில் இறக்கும் பெண்களை மங்கலப் பெண் என்றும், அதன் பின்னும் வாழக்கூடிய பெண்களை அமங்கலப் பெண் (விதவை) என்றும் அழைத்தனர்.

கணவன் இறந்த பின்பு நெருப்பில் பாய்ந்து இறக்கும் பெண்களின் அடையாளமாக, சதிக்கல் நடப்பட்டது. இச்சதிகல்லில், இறந்த வீரனின் உருவம் இருக்கும், அதன் அருகில் இறந்த வீரனின் மனைவி உருவம் இடம் பெற்றிருக்கும். இக்கல்லின் அருகில் மூன்று பெண்கள் கைகூப்பி வணங்குவது போன்று கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். இவர்களைத் தேவலோக மங்கையர்கள் என்கின்றனர். இவர்கள், இறந்த இருவரையும் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்வர் என்கிற அடிப்படையில் இக்கற்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இறந்து போனவர் வணங்கும் தெய்வத்தின் உருவம், எதற்காக இறந்து போனான்? என்ற விவரம், அந்தக் கல்லில் செதுக்கப்பட்டிருக்கும்.

இறந்து போன வீரனின் மனைவி, அவனது இறப்பைத் தாங்க முடியாமல், நெருப்பில் பாய்ந்து இறக்கும் போது, குறிப்பிட்ட இனக்குழு மக்களோ, ஊர் மக்களோ அல்லது அவர்களின் உறவினர்களோ நெருப்பில் பாய்ந்து இறந்த பெண்ணின் நினைவாக, இறந்தவர்களின் கல்லறை அல்லது இறந்த இடம், இறந்தவர்களின் ஊர் என்று ஏதாவது ஒரு இடத்தில் சதிக்கல்லை நட்டு வழிபட்டு வந்தனர்.

*****

வட இந்தியாவிலுள்ள இந்து சமயத்தினரிடம் நீண்ட காலமாக வழக்கத்திலிருந்து வந்த சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதல் வழக்கத்திற்குப் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங் பிரபு 1829 ஆம் ஆண்டு முதன்முதலாகத் தடை விதித்தார். அது குறித்துப் புதிய சட்டம் ஒன்றையும் கொண்டு வந்தார். அவரது புதிய சட்டத்தின்படி, இந்து விதவை ஒருவர் உடன்கட்டை ஏறுதலுக்குத் தாமாகவே முன் வந்தாலும், அதைத் தடுக்கத் தவறினால் அது கொலைக்குற்றத்துககுச் சமம் என அறிவிக்கப்பட்டது. உடன்கட்டை ஏற விதவையைக் கட்டாயப்படுத்துதல் அல்லது உடன்கட்டை ஏறுவதற்குத் தேவையான உதவிகளை அளித்தல் மற்றும் அது தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு அளிக்கப்பட்டது. அதனால், உடன்கட்டை ஏறும் வழக்கம் ஓரளவு குறையத் தொடங்கியது.

இந்தியத் தண்டனைச் சட்டத்தை உருவாக்கிய தாமஸ் மெக்காலே, உடன்கட்டை ஏறுவதற்கு எதிரான பென்டிங்கின் மிகக் கடுமையான சட்டத்தை 1837 ஆம் ஆண்டு சிறிது நீர்த்துப் போகச் செய்தார். அதனால், ஆங்காங்கே உடன்கட்டை ஏறுதல் நிகழ்வு நடக்கத் தொடங்கியது. அதனைத் தொடந்து 1862 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தில், உடன்கட்டை ஏறுவதற்கு எதிராக பெண்டிங் கொண்டு வந்த மிகக்கடுமையான தண்டனைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. உடன்கட்டை ஏறும் விதவை ஒருவர், அதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தால் அது ஒரு தற்கொலையேத் தவிர, கொலையல்ல என்று அந்தப் புதிய சட்டம் கூறியது. அதனால் ஆங்காங்கே, உடன்கட்டை ஏறும் வழக்கம் மீண்டும் சிறிய அளவில் ஏற்படத் தொடங்கியது.

இந்திய விடுதலைக்குப் பின்பு, 1987 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி தலைமையிலான அரசு, உடன்கட்டை ஏறுவதை ஆதரிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் குற்றமே என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டத்தில் உடன்கட்டை ஏறுவதை ஊக்குவித்தல், அதற்கு ஆதரவாகப் பரப்புரைகள் செய்தல், அதை நியாயப்படுத்துதல் என எந்தச் செயலாக இருப்பினும் அதற்கு 7 ஆண்டுகள் தண்டனை விதிக்க வழிவகைகளை ஏற்படுத்தியது. மேலும், உடன்கட்டை ஏறுவதற்குக் கட்டாயப்படுத்துவது அல்லது உடந்தையாக இருப்பது ஆகியவை ஒரு கொலைக்குற்றம் என்றும், அதற்கு ஆதரவாக இருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் இந்த சட்டம் தெரிவித்தது,

அதற்குப் பின்பு, இந்தியா முழுவதும் சதி எனப்படும் கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கம் முற்றிலுமாக நின்று போனது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT