நம்மில் பலர் புது டிசைனில் உடைகளைப் பார்த்தாலோ அல்லது புது மாடலில் பொருட்கள் மார்க்கெட்டில் வந்திருந்தாலோ தேவையைப்பற்றி சிந்திக்காமல் உடனே வாங்கி விடுவோம். “புது மாடல் வந்திருக்கிறது வாங்கலையா“ என யாராவது கேலி செய்வது கூட சிலருக்குப் பெருமையாக இருக்கும். வீட்டில் நிறைய உடைகள், மின் சாதனங்கள், பாத்திரங்கள் உபயோகப்படுத்தப்படாமல் குவிந்து கிடக்கும்.
அதிகமான மற்றும் ஆடம்பர பொருட்களை விலக்கி குறைந்தபட்ச அத்தியாவசியப் பொருட்களுடன் அளவாக அழகாக வாழ்வதே மினிமலிசம். மலிவானவை, தள்ளுபடி என நமக்கு தேவையா இல்லையா என்ற சிந்தனையே இல்லாமல் பொருட்களை வாங்கிக் குவிக்கிறோம். சிலர் கடன் வாங்கி தேவையற்ற ஆடம்பர பொருட்களை வாங்குவார்கள், இதனால் மன அமைதிபோய் மனஅழுத்தத்திற்கு உள்ளாவார்கள். ஆடம்பர தேவையற்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து அத்தியாவசியப் பொருட்களுடன் வாழ்ந்தால் பணத்தை சேமிக்கவும் முடியும்.
குறைந்தபட்ச வீட்டின் நன்மைகளை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. முதலில் பயன்படுத்தாத பொருள்களை அகற்றி ஒரு இடத்தில் வைக்கவும் பிறகு அங்கு வைத்துள்ள தேவைக்கு அதிகமாக இருக்கும் உடைகள், பொருட்களை வரிசைப்படுத்திப் பார்த்தால் எத்தனை பொருட்களை வீணாக வாங்கியுள்ளோம் என்பது புரியும்.. எப்போதெல்லாம் தேவையற்ற பொருளை வாங்க வேண்டுமென்று தோன்றுகிறதோ அப்போது அந்தப் பொருளுக்குரிய பணத்தை தனியாக வைத்து சேமிக்கத் தொடங்கலாம். கணிசமான தொகை சேர்ந்தவுடன் நம் பிற அத்யாவசிய தேவைகளுக்கு அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஏழை மாணவர்களின் கல்விக்கு நன்கொடையாகவோ அல்லது வேறு வகையிலோ பிறருக்கு நம்மால் உதவ முடியும் மினிமலிச பாலிசியைக் கடைபிடிக்க தொடங்கினால் வாழ்க்கை நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் என்பது நிஜம்.
குறைந்தபட்ச தேவைகளுடன் வாழ்வதே ‘மினிமலிச வாழ்க்கை முறை’. இதன் மூலம் வாழ்க்கையில் முக்கியமில்லாதவற்றை அகற்றி, மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைப் பெறலாம். நம் வாழ்க்கையை சிம்பிளாக வாழும்போது நல்லதொரு மாற்றத்தை உணர முடியும். எளிமையான வாழ்க்கையை மேற்கொள்வது சுலபமானது அல்ல. அதனால் பொருள்களைக் குறைக்கவும், பணத்தைச் சேமிக்கவும், பிறருக்குக் கொடுக்கவும் விரைவில் செயல்படுத்த தொடங்க வேண்டும். பயன்படுத்தாத மற்றும் தேவையற்ற பொருட்களை அருகில் உள்ள அனாதை இல்லங்களுக்கு அதிகப்படியான எல்லாவற்றையும் தானமாகக் கொடுக்கலாம். நமக்கும் மன நிறைவு கிடைக்கும்.
மினிமலிசம் வாழ்கை புத்துணர்ச்சியூட்டும் பாதையை நமக்குக் காட்டுகிறது. நம் வாழ்க்கையை எளிதாக்குவதன் மூலம் மனஅழுத்தத்தைக் குறைக்க முடியும். மினிமலிசம் மன நிறைவான வாழ்க்கையைத் தருகிறது. மினிமலிச வாழ்க்கை முறை சிக்கன வாழ்க்கை அல்ல வாழ்வை சீராக்கும் வாழ்க்கை முறை.