short story... 
மங்கையர் மலர்

சிறுகதை - நீயும்.. நானும்!

கல்கி டெஸ்க்

-ஜெ. விணு

ர்போர்ட்டில் செக்கிங்கை முடித்துக்கொண்டு, தனக்கான‌ வாயிலை சரிப்பார்த்து, அங்கு சென்று இருக்கையில்‌ அமர்ந்த ரமேஷ் ஒரு நிமிடம் தன்னை‌ ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.  வெளிநாட்டில் இருந்து தன்‌ தாயகத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்‌‌ இதே ஏர்போர்ட்டில் வந்து இறங்கியது நினைவினில் வந்து‌‌ போனது.‌ 

எவ்வளவு சீக்கிரமாக ஓடிவிட்டன இந்த இரண்டு வாரங்கள்.‌ எத்தனை எத்தனை வேலைகள் ஒரு‌நாள் விழாவிற்கு? கடந்த ஒரு‌வருடமாகவே தன்‌ மகனின் உபநயனத்தை இந்தியாவில்‌தான்‌ நடத்தவேண்டும் என்ற‌ பேச்சு குடும்பத்தில் எழவே, ஆரம்பித்தது அதற்கான வேலைகள்.  

முதல் வேலை... நாள்‌ நட்சத்திரம் பார்த்தது.‌ அந்நாளில் இவனுக்கு அலுவலகத்தில் லீவு கிடைத்தது… மகனுக்கு பள்ளியில் தேர்வுகள் இல்லாத நாளாக அமைந்தது. ஆஸ்தான சாஸ்த்ரிகள் அன்றைக்கு வேறு எங்கும் கமிட் ஆகாமல் இருந்தது. அடுத்தது மண்டபம் தேடியது..

இவையெல்லாம் முடித்து, பத்திரிக்கை அடித்து அனைவருக்கும் தபால் மூலமாகவும் அனுப்பி, வாட்ஸ் ஆப்பிலும்  அனுப்பி, தனித்தனியாக கைபேசியிலும் அழைத்து, ஒரு‌வழியாக அந்த வேலையும் முடிந்தது. 

அடுத்து வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுக்காக, ஒரு சின்ன‌ கெட்- டுகெதர் ஏற்பாடு செய்து, சின்ன ஹோமம் செய்து அவர்களைக் கவனித்து அந்த  ஒரு‌ நாள் நல்லபடியாக நடத்தி முடித்தது. 

விழாவிற்கு வரமுடியாதவர்களுக்காக யூ-ட்யூப் நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்தது இன்றைய‌ ட்ரென்டில் இருந்ததற்கான அடையாளம்.‌ இது  எக்ஸ்ட்ரா வேலை என்றாலும் மனம் விரும்புதே ரகம்தான்..

குடும்பத்தோடு ஒரு வாரம் முன்பாகவே  தாயகம் வந்து மிச்ச மீதி வேலைகளைப் பார்த்து, பின்னர் மண்டபம் சென்று,‌ சொந்த பந்தங்களை‌ வரவேற்று‌, முறைப்படி அனைத்தையும் செய்து, மகனும்‌ அதனை‌ மகிழ்ச்சியுடனே‌ செய்துகொண்டு அனைத்தும்  நன்றாகவே முடிந்ததில்...‌திருவிழாவில் தேரை தனி‌ஒருவனாக நகர்த்தி‌ அதை ஊர்வலம் அழைத்துச் சென்று‌ பின்‌ அதை மறுபடியும் அதன்‌ பழைய‌ இடத்திலேயே விட்ட உணர்வு ஏற்பட்டது.

உபநயனம் நடைபெற‌ இருந்த இரண்டு நாட்களுக்கு முன்‌ அத்தையின்‌ உடல் நிலை மோசமானதில் கொஞ்சம் டென்ஷன் ஆனது... எதுவும் சாப்பிடாமல் மதியம் இரண்டு மணி வரை உபநயன தினத்தன்று இருந்து..‌. வந்தவர்களைப் பார்த்து சாப்பிடுங்க என்று கூறியது... வயதான சாஸ்திரிகள் முன் அமர்ந்து மந்திரங்கள் சொன்னது, மகனுக்கு ப்ரம்ம உபதேசம் செய்தது… நடுவே மனைவியின் மடிசார் அழகை ரசித்தது.. சுற்றம் சூழ மேடையில் அமர்ந்திருந்தது...‌கெட்டி மேள‌ வாத்தியங்களின்‌ ஒலிகள்... அனைத்துமே ‌நெஞ்சினில் நீங்கா இடம் பெற்று‌விட்டது....

அத்தனையும் அசைப் போட்டப்படி இருந்தவனுக்கு விமானம் வந்ததாக அறிவிப்பு வரவே, இருக்கையை விட்டு எழ மனம் வரவில்லை. மீண்டும் வெளிநாட்டு வாழ்க்கை.. இயந்திர உலகம்.‌ மாறுவேடம் போட்டுக் கொள்ள வேண்டும். அங்கு சென்ற‌ அடுத்தவிநாடி‌ முதல் எனத் தோன்றினாலும்.. இதோ இந்த விழாவும்   அது தந்த மனநிறைவும்.. இன்னும் அடுத்ததாக வரும்  நாட்களை அவனை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.. என்ற நினைப்பில் அவன் விமானம் ஏறத் தயாரானான்.

தே இடத்தில் அவனருகில் இருந்த அவன்‌ மனைவி சீதாவின்‌ எண்ண ஓட்டங்கள் வேறு‌மாதிரி‌ இருந்தன.‌ உபநயனம் என்ற‌ பேச்சுவார்த்தை  ஆரம்பித்தில் இருந்து முதலில்‌ சில வாக்குவாதங்கள்...‌ செய்து முடிப்பதில் இருந்த‌ சிரமங்கள்... பதின்‌வயதில்‌ இருக்கின்ற‌ மகனை வழிக்குக் கொண்டுவருவது… ஓயாத வீட்டு வேலைகள்... உடம்பும், மனமும் கொஞ்சம் சோர்வடைந்தாலும்… தன்னைத் தானே சரிபடுத்திக்கொண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை இவளும் இவள் தரப்பு வேலைகளை வெளிநாட்டில் இருந்தபடியே செய்தது…‌ என‌ எண்ண அலைகள் ஒன்றன்‌ மேல் ஒன்றாக வந்தன..‌

கணவனின்‌ வேலை சில சமயங்களில் பணத்தைக் கொடுத்து விடுவதில் முடிந்துவிடுகிறது..‌ஆனால், Back office operation  அதில்தானே சவால்கள்‌ அதிகம்..‌. பெண்ணின்‌ சவால்கள் அதிகம் வெளியில் தெரிவதில்லையோ என‌ நினைத்தாள். இவன்‌ சொந்தங்களையும், அவள்‌ சொந்தங்களையும் அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம்... இருவீட்டாரையும் சில விஷயங்களில் சமாதானம் செய்யவேண்டும்...‌ எவ்வளவு சோர்வு ஏற்பட்டபோதும் விழா தினத்தன்று பளிச்சென்று உடை உடுத்தி, வந்தவர்களை வரவேற்று, உபசரித்ததில் இவளின்‌ பங்கு அவனை‌விட‌ ஒரு‌படி‌ மேல்தான்‌‌ எனத் தோன்றியது அவளுக்கு...

ஊராருக்கு இவன்‌ ஒத்தையில் தேர்‌ இழுப்பதாகத் தோன்றினாலும்,... அந்தத் தேர்‌ மிகவும் வேகமாக ஓடியபோது..‌. இவள்தானே முட்டுக் கொடுத்தது. சில  சமயங்களில் தேர் நகராமல் இருந்தபோது இவள்தானே ஒரு கை பிடித்து அந்தத் தேரை‌ நகர்த்தியது… 

பல யோசனைகளில் மூழ்கியவளுக்கு ஒன்று புரிந்தது… கணவன்‌ பணத்தையும் கௌரவத்தையும் சம்பாதிப் பதற்காக… வெளிநாட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து... அதன் மூலம்  கிடைக்கும் சந்தோஷங்களையும், அதற்காக செய்யும் சில தியாகங்களையும் பார்த்தால்… இந்த மனைவி என்ற‌ ஸ்தானத்திற்குள்ளும்… சில சந்தோஷங்களும், தியாகங்களும் சரிசமமாக  இருக்கத்தான்‌ செய்கின்றன.

விமான அழைப்பு  இவள்‌ காதிலும்  விழவே… உபநயனம் நல்லபடியாக முடிந்தத் திருப்தியில் இவளும்‌, ரமேஷுடன் கைக்கோர்த்தபடி விமானம் ஏறத் தயாரானாள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT