இரவு சாப்பாடு முடிந்து
வீட்டு முற்றத்தில்
கட்டில் போட்டு
உட்கார்ந்திருப்பார் அவர்!
அழகாக சிலுசிலுக்கும்
வேப்பமரக் காற்றசைவில்
நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறையும்!
பாத்திரங்கள் கழுவி முடித்து
வாசல் படியிலமரும் துணைவி
காலை நீட்டி கதவு நிலையில்
சாய்ந்து கொள்வாள்!
ஈரக் கை துடைத்த
முந்தானை சரியாகி
இடுப்பில் செருகப் படும்!
வெற்றிலை பெட்டி திறந்து
கொட்டை பாக்கெடுத்து
அவரிடம் நீட்டுவாள்!
என்னவென்று பார்க்காமலேயே
அனிச்சையாய் வாங்கி
வாயில் குதப்பிக்கொண்டே
செல்லமாய் சீண்டுவார் அவளை!
கல்யாணத்துக்கு முந்தைய
அவளின் உறவினர்கள்
சகட்டுமேனிக்கு
அவரின் வார்த்தைகளில் வந்து விழுவார்கள்!
பதிலம்பு தொடுத்துக் கொண்டே
வெற்றிலை எடுத்து
பக்குவமாய் சுண்ணாம்பு தடவித் தருவாள்!
தினம் தினம் இரவு
இதே நேரம் இருவருக்கும்
பழைய நினைவுகள்
மறுபிறப் பெடுக்கும்!
அதில் சந்தோஷம் ஊற்றெடுத்து
இருவரையும்
குளிப்பாட்டும்!
இரவு சந்திரன்
தேய்ந்து வளர்ந்து
தேய்ந்து வளர்ந்து
மாறாது நிலைத்திருக்க
அவர் மட்டும்
தேய்ந்து கொண்டே போனார்!
கடைசி நாள் இரவு
மாத்திரை கொடுத்தாள் அவள்!
கையில் வாங்கியவர்
முதல் முதலாக
அது என்னவென்று உற்றுப் பார்த்தார்!