அப்போதுதான் தூங்க ஆரம்பித்த உத்ராவை, அவளின் செல்ல நாய் வந்து எழுப்பியது. உறக்கம் வராதா எனத் தவித்துக் கொண்டிருந்த அவளை, உறக்கம் நெருங்க, அந்த உறக்கத்தை நாயின் குரல் கலைத்தது அவளுக்குப் பிடிக்கவில்லை.
'இது வேறு என்னைத் தொந்தரவு செய்ய' என நினைத்து, படுக்கையில் இருந்து எழுந்து தன் காலைநேர வேலைகளைத் தொடங்கினாள். ஐம்பது வயதை நெருங்கும் அவளுக்கு ஏனோ சில நாட்களாக வாழ்க்கைக் கசக்க ஆரம்பித்தது. ஒரே மாதிரியான இயந்திரத்தனமான வெளிநாட்டு வாழ்க்கை. சொந்தங்களும் , பந்தங்களும் எப்போதோ விலகி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. கணவன், குழந்தைகள், அலுவலகம், எந்நேரமும் உழைப்பு என்ற வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தியது. சில நேரங்களில் எங்கேயாவது ஓடிவிடலாமா என மனம் நினைக்கத் தொடங்கியது அவளுக்கு.
கடமைக்கு சில வேலைகளை செய்து அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து மீண்டும் தன்னை படுக்கையறை மெத்தைக்குள் நுழைத்துக் கொண்டாள். 'ஏன் இந்த வாழ்க்கை, ஏன் இந்த ஓட்டம், எதற்காக சம்பாதிக்கிறேன், எப்போதும் கணவன் சொல்லியபடியே வாழவேண்டிய நிர்பந்தம். காதலித்துத் திருமணம் செய்து கொண்டவன் இப்போது சுமையாக தெரிகின்றான். வயதாக ஆக சுமைகள் கூடிக்கொண்டே இருக்கின்றதே தவிர , குறைந்தபாடாக இல்லையே' என எண்ணிக் கொண்டே இருந்தவளுக்கு அந்த குளிர்ந்த அறையிலும் கூட காற்றில்லாமல் மூச்சு முட்டுவது போல் இருந்தது.
இரவெல்லாம் தூக்கம் வராதவளுக்கு இந்தப் பகற்பொழுதில் தூக்கம் வந்தது. தூக்க கனவில் நிறைய அவள் குடும்பத்து பெண்கள் வந்தார்கள். அவளுக்கு யாரிடம் பேசுவது என்று புரியவில்லை. எல்லோரையும் விட்டு விட்டு தன் அப்பாவின் பாட்டியைத் தேர்ந்தெடுத்தாள். அவளின் சிறிய வயதில் பார்த்திருக்கிறாள் இப்பாட்டியை. அந்தக் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்டவர் போல் இல்லாமல், ஒரு காட்டன் புடவையில் தலையில் முக்காடு அணிந்தபடி எந்நேரமும் பொதுவாக யார் கண்ணிலும் படாமல் ஒரு அறையின் மூலையில் இருப்பார். உத்ராவை எப்போவாவது அழைத்து தலையில் பூ வைத்து விடுவார். சில நேரங்களில் வீட்டின் பின் அமர்ந்து பாத்திரங்கள் தேய்த்துக் கொண்டிருப்பார். வீட்டிலிருந்து யாராவது எங்கேயாவது வெளியில் புறப்பட்டால் அவர்கள் கண்ணில் படாமல் அவசர அவசரமாக ஒளிந்து கொள்வார். அவரிடம் அவ்வளவாக யாரும் பேசமாட்டார்கள். எந்த விசேஷத்திற்கும் அவருக்கு அனுமதி இல்லை. புது ஆடைகள் எல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. இதுபோன்ற சில சில விஷயங்கள் தான் உத்ராவிற்கு அவரைப் பற்றித் தெரியும். அவளின் பள்ளிப்பருவத்திலேயே அந்தப்பாட்டி இறந்து விட்டதால் அவரை அவள் மறந்தே போயிருந்தாள். இப்போது திடீரென அப்பாட்டி கனவில்.... அவருடன் பேச ஆரம்பித்தாள் உத்ரா.
உத்ரா.. பாட்டி எப்டி இருக்கீங்க?
பாட்டி.. நல்லாருக்கேன் நான்.. நீ எப்டி இருக்க... என்ன பண்ற இப்போ?
உத்ரா.. பிடிக்காத வாழ்க்கைய வெளிநாட்ல வாழ்ந்துண்டு இருக்கேன் பாட்டி..
பாட்டி.. பிடிக்காத வாழ்க்கை, பிடிச்ச வாழ்க்கை அப்டின்னா என்ன? கொஞ்சம் சொல்லேன்..
உத்ரா.. சரியா சொல்லத் தெர்ல பாட்டி.. இப்போ நடக்கற எதுவுமே எனக்கு பிடிக்கல.. மனசு ரொம்ப வெறுத்துப் போயிருக்கேன்.
பாட்டி.. மனசு வெறுத்து போற அளவுக்கு ஒரு வாழ்க்கையா? அப்டி என்னம்மா நடந்திடுச்சு உன் வாழ்க்கைல? வீடு வாசல் இல்லையா? குழந்தகுட்டி ன்னு எதுவும் வர்லயா? பணப்பிரச்சினையா? புருஷன் உன் மேல அன்பா இல்லயா? என்ன உன் பிரச்சின?
உத்ரா.. எல்லாமே இருக்கு பாட்டி.. அதுதான் என் பிரச்சின. அது கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கு. அவர் என் கிட்ட காட்ற பாசம் கூட எனக்குப் பிடிக்கலை. அது ஒரு பாரமாவே தெரியுது. நான் என் புருஷன், குழந்தைங்க, இந்த வீடு, இந்த ஊரு, என் ஆபிஸ் எல்லாமே எனக்கு பாரமாத்தான் இருக்கு. பித்து பிடிச்சது மாதிரி இருக்கு... எனக்குப் புது முகங்கள பாக்கனும், புது ஊருக்கு போகனும்ன்னு தோணுது... ஆனா என்ன யாரும் விடமாட்றாங்க... எனக்கு மட்டும் தான் இப்டி நடக்கற மாதிரி இருக்கு. சுத்தி எல்லாரும் சந்தோஷமா இருக்கற மாதிரி இருக்கு.. இத நெனச்சு, நெனச்சு, நான் இன்னும் நொந்து போறேன். ஓ ன்னு அழணும்னு தோணுது .. நீங்கெல்லாம் எப்டிதான் நாலு சுவத்துக்குள்ள ஒரு வாழ்க்கைய வாழ்ந்தீங்க பாட்டி? அதுவும் பாட்டி நீ.. எப்டி உலகத்துல யாரோடையும் பேசாம, உனக்குன்னு எதுவும் வாங்கிக்காம, உன் பையன் கிட்ட இருந்து எதுவும் எதிர்பார்க்காம, உன்ன சில பேர் வெறுத்து ஒதுக்கினா கூட, நீ அதே இடத்துல அந்த மனுஷங்க கூட, எண்பது வயசு வரைக்கும் வாழந்தியே... எப்டி? எனக்கு ஐம்பதுக்கே உடம்பு தளர்ந்து போன மாதிரி இருக்கு.. யாரோடையும் நீ பேசினதில்ல.. யாருக்கும் பாரமா இருக்கக் கூடாதுன்னு உன்னால ஆன உடலுழைப்ப குடுத்துட்டு இருந்த. உனக்குன்னு வந்த பென்ஷன் கூட வீட்டுக்கே கொடுத்துடவ.. எப்டி பாட்டி உன்னால முடிஞ்சுது?
பாட்டி.. ரொம்ப யோசிக்காத கண்ணா.. நம்ம வாழ்க்கைல ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருத்தர் நம்மகூட பயணம் செஞ்சிட்டே இருப்பாங்க. பள்ளில பள்ளித்தோழி... ஆபீஸ் ன்னா.. ஆபீஸ் தோழி.... அப்றம் அக்கம் பக்கத்துல இருக்கறவங்க சில பேர்... அப்றம் கல்யாணம் ன்னு ஒன்னு நடக்கும்... நான் பேச நினைப்பதெல்லாம் அந்த மனிதரும் பேச வேண்டும் என நினைப்போம் .. கண்டிப்பாக அது நடந்தேறாது. என்னதான் எண்ண அலைகள் ஒன்றாக இருந்து திருமணம் செய்திருந்தாலும், வாயிலிருந்து வரும் வார்த்தைகளும், செயல்களும் வேறு வேறாகத்தான் இருக்கும். திருமணம், குடும்ப வாழ்க்கை எல்லாம் நம் வாழ்க்கைல கட்டாயபடுத்தப்பட்ட ஒன்னு. அது வேண்டாம் ன்னு ஒதுங்கி இருக்கறவங்க கம்மிதான். கல்யாண வாழ்கைல நிறைய சர்க்கஸ் வேல தான் நடக்கும். பாதி நேரம் நாம ஜோக்கர் வேலயத் தான் பாத்துட்டு இருப்போம். இல்லயா, ரிங் மாஸ்டர் ஆ மாறுவோம்ன்னு நெனப்போம்..
ஒன்னு மனசுல வச்சுக்கோ கண்ணு... எத்தன எத்தன மனிதர்கள நீ பாத்தாலும், எந்த இடத்தில நீ இருந்தாலும், உன் வாழ்க்கைல யாரும் இல்லாம போனாலும், உன் ஆத்மா அது உன்கிட்ட தான் இருக்கும். அது மட்டும்தான் உனக்கு நல்ல தோழி. நீ இருக்குற இடம் சொர்க்கமோ, நரகமோ, எதுவா இருந்தாலும் உன் ஆத்மதோழியோட ஒரு நல்லபடியா ப்ரெண்ட்ஷிப் வச்சுக்கோ. அதோட பேசு.
இது தான் என் ரகசியம். எனக்கு என் வீடு, சொந்தம் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. என் ஆத்மதோழியோட பேசிட்டே இருந்தேன். அது என்ன எப்போதும் உற்சாகமா இருக்குற மாதிரி மாத்திடும். தனிமையை நான் என்னைக்கும் உணர்ந்ததே இல்ல.. என் ஆத்மதோழியோடு இருந்த இடத்தில் இருந்து கொண்டே... எல்லா இடங்களுக்கும் சென்றேன். என் எண்ணங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டேன்.. அவள் அவ்வப்போது என்னைத் தட்டிக் கொடுத்து, கண்டித்து என்னை சமநிலையில் இருக்கவைத்தாள்.
இதைக் கூறியபின் பாட்டியின் முகம் மறைந்து போனது.....பாட்டி பாட்டி என அவள் எத்தனை முறை அழைத்தாலும் திரும்ப வரவில்லை....
உத்ரா கண்விழித்தபோது, அவளின் நாய் அவளை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தது. அவள் அதைப் பார்த்து சிரித்தபடியே அதைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.