தெருவிளக்கின் மங்கிய வெளிச்சத்தில்... மழை பெய்து ஓய்ந்து, இலேசான தூறலாக மாறி உதிர்ந்து கொண்டிருந்தது. இரவு, நேரம் ஒன்பது மணியை நெருங்கி கொண்டிருந்தது.
அந்த பேருந்து நிறுத்த கூடத்தில்… மூன்று நான்கு ஆண்களுக்கு அருகில்... ஒரு பெண், ஓரமாக ஒதுங்கி தனியாக நின்றிருந்தாள்.
அவளுடைய இடது கரத்தில் சில்வர் கலரில் வாட்ச் அணிந்திருந்தாள். வானத்தில் மின்னல் மினுமினுக்கும் போதெல்லாம், அந்த வாட்ச் மீது படிந்திருந்த மழை நீரினால் அதுவும் மின்னியது.
அவள் மழையில் நனைந்திருந்ததால், அவளுடைய சுடிதார் ஈரமாகி, அவளுடைய உடலோடு ஒட்டி இருந்தது. அவளுடைய வலது கையில், மொபைல் போனையும், ஒரு சிறிய பர்சையும் சேர்த்து பிடித்திருந்தாள்.
அவள் அங்கு வந்து நீண்ட நேரமாகி விட்டது போலும் , அதுவரை அவள் எதிர்பார்த்து இருந்த பேருந்து எதுவும் வராத காரணத்தால்… நிலைகொள்ளாமல்.. ஒரு சலிப்போடு காணப்பட்டாள்.
காத்திருப்பது கூட சிரமமாக தெரியவில்லை, அந்த சாராய மணமும், புகையிலை நெடியும் கமழ... சபலம் நிறைந்த பார்வையோடு, அவளை நோட்டமிடும்... சில ஆண்களுக்கு நடுவே நின்றிருப்பதுதான் அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
அங்கே சில ஆண்களின் பார்வையும்... அவர்களுக்கிடையே நடக்கும் கிசுகிசு பேச்சுகளும், அவளுக்கு முகம் சுளிக்கும்படி இருந்தாலும், பல்லை கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டாள்.
‘ஒரு பெண் கழுத்து நிறைய நகைகளுடன் நள்ளிரவில் வீதி வழியே சென்று பாதுகாப்பாக வீடு திரும்பும் போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று மகாத்மா காந்தி சொன்னதாக அவள் படித்து இருக்கிறாள்.
பொது இடங்களில் வைத்து, பெண்களை காமக்கண் கொண்டு பார்க்கின்ற மனிதர்கள் இருக்கும் வரையிலும், அவர் சொன்னது நடக்க வாய்ப்பில்லை என்று நினைத்தாள்.
அப்போது ஒரு பக்கமா சாய்ந்த நிலையில், மழை நீரும் சேறும் படிந்த, நகர பேருந்து ஒன்று பெருத்த பிரேக் சப்தத்துடன் வந்து நின்றது.
அவள் அவசரமாக ஓடி அந்த பேருந்தில் முன்பக்கம் ஏறினாள். அவளோடு கூடவே, அவளுடைய முதுகை உரசியபடியே கருப்பு தொப்பி போட்ட குடிமகனும் அந்த பேருந்தில் ஏறினான்.
அவனுக்கும் பின்னால் வந்த ஒருவன், வேகமாக பேருந்தில் ஏறுவது போல வந்து, அவளுடைய பின் கழுத்து பகுதியில் கையை வைத்து விட்டு… அவள் கழுத்தில் ஒன்றும் இல்லாததால், சட்டென்று திரும்பி, வேகமாக பேருந்தின் பின்பக்க படிக்கட்டில் ஏறுவதற்கு ஓடினான்.
அவளுடைய கழுத்தை தடவி விட்டு ஓடியவனை, அதிர்ச்சியோடு திரும்பி பார்த்தாள். அவன் தாறுமாறாக கலைந்த தலைமுடியோடு, வெளிர் மஞ்சள் நிறத்தில் அரைக்கை சர்ட் அணிந்து இருந்தான்.
அவள் முறைத்து பார்ப்பதை கவனித்தவுடன், அவன் 'இஇ...' என்று வெற்றிலை கறை படிந்த பற்களை காட்டி சிரித்து விட்டு, அவளுக்கு முத்தம் இடுவது போல வாயை குவித்து காட்டினான்.
"ச்சே" என்று வெறுப்புடன் அவள், தலையை திருப்பிக்கொண்டாள்.
"ஆம்பளைங்க எல்லாம் பின்னாடி படிக்கட்டு பக்கம் போய் ஏறுங்க" என்று சத்தம் போட்டவாறே , பேருந்தின் பின்பக்க படிக்கட்டிலிருந்து இறங்கி முன்பக்க படிக்கட்டில் ஏறுவதற்கு ஓடி வந்தார் கண்டக்டர்.
அதுவரை அவளுக்கு பின்னால் முதுகில் உரசியபடி ஏறிக்கொண்டிருந்த, கருப்பு தொப்பி குடிமகன், கண்டக்டரின் குரல் கேட்டதும், வேண்டா வெறுப்பாக பேருந்திலிருந்து இறங்கி, பின்பக்க படிக்கட்டில் ஏறுவதற்கு போனான்.
ஆனால், போவதற்கு முன்பு, அவளுடைய இடுப்பை ஒரு முறை அழுந்த பிடித்து விட்டு போனான்.
அவனுடைய அந்த செய்கை, அவளுக்கு சுருக் என்று கோபத்தை வரவழைத்து விட்டது.
"பொறுக்கி" என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி… அவனை முறைத்து பார்த்தாள்.
பெண்களின் பாதுகாப்பு இந்த மாதிரி கீழ் குணம் கொண்ட மனிதர்களால் பதம் பார்க்கபடுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. “நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விடில்” என்கிற பாரதியின் பாடல் அவளுக்கு நினைவுக்கு வந்தது.
அவள் பேருந்துக்குள் ஏறியதும், கண்டக்டர் விசிலை ஊத பேருந்து கிளம்பியது.
"எல்லாரும் சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கிக்கங்க" என்று கண்டக்டர் சொல்லிக்கொண்டே வந்தார்.
‘பேருந்துக்குள்ளே ஏறிய சில்லறைகள் பத்தாது என்று, இவர் வேறு சில்லறை கேட்கிறார்’ என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
சற்று தூரம் வரை பேருந்து சென்றதும், அடுத்த நிறுத்தம் வந்து விட்டதால்… பேருந்தை நிறுத்துவதற்காக, கண்டக்டர் விசில் கொடுத்தார்.
உடனே டிரைவர் பேருந்தின் வேகத்தை குறைத்து நிறுத்த தொடங்கினார்.
அப்போது அந்த வெளிர் மஞ்சள் சட்டை போட்டவன் … பின்பக்கத்தில் இருந்து அவசரஅவசரமாக கூட்டத்திற்குள் நுழைந்து, அவள் நின்ற இடத்திற்கு வந்தான்.
அவளுக்கு அருகில், இருக்கையில் உட்கார்ந்து இருந்த வயதான அம்மாவின் தலையில் கையை வைத்து அழுத்தினான்.
அவனுடைய கை பட்டதும், அவங்க தலையை தூக்கி அவனை பார்க்க...
அவன் சட்டென்று அந்த அம்மா கழுத்தில் அணிந்திருந்த நகையை பிடுங்கிக்கொண்டு… பேருந்தின் முன் பக்க வழியே இறங்கி ஓட முயன்றான்.
கண நேரத்தில் நடந்த அந்த நிகழ்வை அவள் கவனித்து விட்டாள்.
அதே நேரத்தில் அந்த அம்மாவும் உஷாராகி, அவன் கையை விடாமல் கெட்டியாக பிடித்து இழுத்து,
"டேய் ...நில்லுடா ...திருடன்… திருடன்" என்று கத்த…
பேருந்தில் இருந்தவர்கள் இந்த காட்சியை பார்த்து, அதிர்ச்சியாகி... பயத்தில் உறைந்து போய் நின்றனர். பேருந்து டிரைவரும் சட்டென பிரேக் போட...பெரும் சத்தத்துடன் பேருந்தும் நின்றது.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக…
அவள் அதிரடியாக அந்த வெளிர் மஞ்சள் சட்டை திருடனின் பரட்டை தலை முடியை கொத்தாக பற்றி இழுத்து, அவன் ஓங்கி முதுகில் பலமான ஒரு குத்து விட்டாள்.
"அய் ...அம்..மா..."
என்ற அலறலுடன் அவன் நிலைகுலைந்து, கையில் இருந்த நகையை அப்படியே போட்டு விட்டு, தலைகுப்புற படிக்கட்டு தாண்டி வெளியே சாலையில் விழுந்தான்.
அவனுக்கு பின்னால் அவளும் வேகமாக படிக்கட்டில் இறங்கி, சாலையில் தடுமாறியபடி எழுந்து நின்றவனை, சட்டை காலரை பிடித்து இழுத்து, அவன் முகத்தில் பலமாக ஒரு அறை விட்டாள்.
அவனுடைய வெளிர் மஞ்சள் சட்டை அங்காங்கே சிவப்பு நிறமானது.
அவனுக்கு விழுந்த அறையில், தலை கிறுகிறுத்து போய் திரும்ப சாலையில் உட்கார்ந்து விட்டான்.
பேருந்தில் இருந்த கண்டக்டர், டிரைவர் உட்பட எல்லோருக்கும், அவளுடைய இந்த அதிரடி செயல் அதிர்ச்சியாகவும், அதிசயமாகவும் இருந்தது.
பேருந்துகள் மற்றும் கூட்டம் நிறைந்த பொது இடங்களில், தனியாக வருகிற பெண்கள் படுகின்ற சிரமங்களை, அவர்களை குறி வைத்து நடக்கும் அத்துமீறல்களை கேள்விப்பட்ட மக்களுக்கு, அந்த திருடனை ஒரு பெண் திரைப்பட பாணியில், அடித்து வெளுப்பதை பார்த்து, வியந்து போனார்கள்.
நகையை பறிகொடுத்த அந்த அம்மா, அறுந்து போன நகையை கையில் அள்ளிக்கொண்டு, அவளை கையெடுத்து கும்பிட்டாள்.
“கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்சு, அரைவயிறு, கால் வயிறுக்கு கஞ்சி குடிச்சு சேர்த்த காசுல... பலவருஷமா அடகு கடையில் இருந்த நகையை நேத்துதான் மீட்டெடுத்தேன்மா!. அதையும் இந்த திருட்டு நாய் பறிச்சுட்டு போக இருந்தான். தெய்வம் மாதிரி வந்து தடுத்துட்டேம்மா.! ரொம்ப நன்றிம்மா”.
அந்த அம்மாவின் நெகிழ்ச்சியான பேச்சுக்கு, அவள் ஒரு புன்னகையை மட்டும் பதிலாக தந்து விட்டு, அவளுடைய செல் போனை எடுத்து பேசினாள்.
அடுத்த சில நிமிடங்களில், அந்த இடத்திற்கு சைரன் ஒலியுடன் ஒரு போலீஸ் வாகனம் வந்தது. அதில் வந்த போலீசார், அவளை பார்த்து சல்யூட் அடித்தனர்.
"இவனை அரெஸ்ட் பண்ணி ஜீப்ல ஏத்துங்க… இந்தம்மாகிட்டே ஒரு ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கிக்கங்க"
என்று சொல்லிக்கொண்டே, பேருந்தில் ஏறும் போது அவளுடைய இடுப்பை தடவி விட்டு போன, அந்த கருப்பு தொப்பியோடிருந்த குடிமகனை கூட்டத்தில் தேடினாள் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி.
பெண் பயணியாக வந்து, பேருந்தில் இருந்த பொறுக்கியை புரட்டி எடுத்த இன்ஸ்பெக்டர் ஈஸ்வரியின் அதிரடியை பார்த்தவுடனே அந்த குடிமகன், அங்கிருந்து அப்போதே ஓடி விட்டான்.
இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி இப்படி இரவு நேரங்களில், சாதாரண உடையில் (மப்டி) நகர்வலம் வந்து, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது குறித்து அங்கிருந்தவர்கள் பாராட்டி பேசிக்கொண்டார்கள்.