Women with her six kids 
மங்கையர் மலர்

சிறுகதை: தோல்வி!

கல்கி டெஸ்க்

- சசிகலா விஸ்வநாதன்

சுகந்தினி வீட்டு சாவியை முதன்மை அலுவலகரான சிவசங்கரிடம் ஒப்படைக்கும் போது கை நடுங்கியது கண்டு அவரும் மனம் நெகிழ்ந்தார். ஆயினும் இதுவே  நடைமுறை. கணவர் இறந்த பின் மூன்று மாதங்களே அலுவலக குடியிருப்புகளில்  வசிக்க இயலும். இளம் விதவையானவள் இனி என்ன செய்யப் போகிறாள் என்ற கவலையில் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக  மீட்டெடுத்துக்கொண்டு தன் அலுவலில் ஈடுபட்டார் சிவசங்கரன்.

குடியிருப்புக்கு அருகே ஒரு நாள் திடீரென ஒரு ஓலை குடிசை எழும்பி இருப்பது கண்டு லேசான மன உந்துதலில் ப்யூன் ராமேசிடம் விசாரிக்க, "ட்ரைவர் சம்சாரம்தான் சார் குடிசை போட்டிருக்கு. அது இப்ப க்ளப் ஹௌசில் வேலை பாக்குது. வரவங்க போகிறவங்களுக்கு தண்ணீர், சிகரெட் பாக்கெட் வாங்கிக் கொடுக்குது. டேபிளுக்கு டிபன் எடுத்தாந்து வைக்குது. க்ளப்பை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யுது. முழு நேரமும் அங்கிட்டேதான் கிடக்குது. வரும் ஆஃபிசர்கள சேர்ந்து ஏதோ கொடுக்கறாங்க. வாழ்க்கையில் தோத்துட்டோமே; என்று ஒரு பக்கம்  அழுதாலும்; நிமிந்துட்டது; அது. வூட்டுக்காரர் வேலையை மகளுக்கு வாங்கப் போகுதுன்னு பேசிக்கிறாங்க. பாவம் சார்! எப்படி இருந்த பொண்ணு இப்படி திண்டாடுறா! பொறந்த வீட்டுக்கு போக மாட்டாம இங்கனக்குள்ளேயே, பிழைக்கலாம்னு இருக்குது. ரொம்ப கௌரவம் பாக்குது. அது பேசுவதும் சரிதான். ஆறு வளர்ந்த பிள்ளைங்களை வைச்சுட்டு பொறந்த வீடு போனா; எந்த அண்ணி ஒத்துக்கும்? அவர்களுக்கே குடும்பம் பெருசா ஆகிப் போய் இருக்குமே" என்று அங்கலாய்த்தான்.

இரண்டு மாதம் கழித்து ஒரு நாள் மீண்டும் சுகந்தினி தன் மூத்த பெண் சுரேகாவோடு வந்திருந்தாள். "சார்! என் பெண்ணுக்கு அவள் அப்பாவுடைய வேலை கருணை அடிப்படையில் கிடைச்சுருக்கு. க்வார்டர்ஸ் அலாட்மென்ட் ஆர்டர். டீ க்ரேட் . ஒரு நல்ல வீடு போட்டுக் கொடுங்க. கார்னர் வீடா இருந்தா தேவலை, சார். பிள்ளைங்க புழங்கிக்க வசதியாய் இருக்கும்" என்று மலர்வோடு கூறினாள். முதலாம் க்ரேட் வீட்டில் இருந்தபோது இருந்த அதே மலர்ச்சியுடன் பேசியது கண்டு, சிவசங்கரன் அயர்ந்து விட்டார்.

இருப்பதற்கும் அதிகம் மராமத்து இல்லாத ஒரு வீடு இருந்தது. அனால் அது ஆஃபீஸுக்கு தொலைவாக இருந்தது கண்டு தயங்கினார். சுரேகா "பரவாயில்லை, சார். சௌத்ரி மாமா சைக்கிள் கொடுத்திருக்கிறார். அதில் நான் போய் விடுவேன. க்ளப் ஹௌஸுக்குப் பக்கமாய் இருக்கிறது; அம்மாவுக்கு சௌகரியமாய் இருக்கும். என்னை ஆசிர்வாதம் பண்ணி சாவி கொடுங்க சார்‌ நாளைக்கே நாங்கள் குடி போக வேண்டும்." என்றாள்.

சிவசங்கரன் மறு வாரம்  ஏதோ வேலையாக முதன்மை அலுவலகம் போயிருந்த போது பாவாடை தாவணியில் சுரேகா பரபரப்பாக அலுவலில் இருப்பதைப் பார்த்து சந்தோஷமடைந்தாதார். "என்னம்மா! வீடு சௌகரியமாய் இருக்கா? அம்மா நலமா?" என்று விசாரித்தார். "ரொம்ப நல்லாவே இருக்கிறோம் மாமா. குறையொன்றும் இல்லை." என்றாள். அவள் அப்பாவின் சம்பாத்தியத்தில் பாதிகூட இவளுக்கு வர வாய்ப்பில்லை. ஆனாலும் நிறைவான மனது, அவள் அம்மா, சுகந்தினி போல்.

இரண்டு வருடம் கழித்து மீண்டும் சுகந்தினி "சார் எனக்கு ஸடெனோ டைப்பிஸ்ட்டாக வேலைக்கு கிடைத்து விட்டது. போனவாரம் வேலைக்கு சேர்ந்துட்டேன். எனக்கு "பி"க்ரேட் வீடு சாங்ஷன் ஆயிருக்கு. கொஞ்சம் பெரிய வீடு பிள்ளைங்களுக்கு வசதியாய் இருக்கும். உங்க கைராசி அந்த வீட்டுக்குப் போனதுமே எல்லாம் நல்லாவே நடக்குது." என்றாள்.

"நல்ல ஒரு வீடு! கார்னர் வீடு தானே வேண்டும்? ஆஃபிஸுக்குப் பக்கத்திலேயே இருக்கு" என்று சொல்லி அலாட்மென்ட் போட்டுக் கொடுத்தார் சிவசங்கரன்.  ராமேசிடம் விசாரித்ததில் தெரிந்தது, சுகந்தினி இந்த ஒரு வருடத்தில் இந்தி இங்லிஷ், இரண்டிலும் டைப்பிங்கும் சுறுக்கெழுத்தும் பயின்று ஹையர் தேர்வில் தேர்ச்சி பெற்று அவள் கணவரின் நண்பர்கள் சிபாரிசுடன் அவளுக்கென்றே ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறார் என்று. "ரொம்ப விவரம், சார்! அந்த அம்மா சரியான இடத்திலே கல்லெறிந்து மாங்காய் எடுத்திருக்கு. அந்த குடிசையைக்கூட பிரிக்காம, குடக்கூலி இல்லாம ஒருத்தருக்கு சும்மாவே கொடுத்திருக்கு. இப்ப க்ளப் வேலையை மூத்த பையனை பார்க்க சொல்லியிருக்கு. கடைசி பையனை  வார சம்பளத்துக்கு சேர்த்து விட்டிருக்கு. அந்த குடும்பம் நிமிர்ந்துடும், சார்!" என்றான்.

சிவசங்கரன் அவ்வப்போது சுகந்தினியையோ சுரேகாவையோ பார்ப்பதுண்டு. வழக்கம்போல நலம் விசாரிப்பது வழக்கமாகிப் போய் விட்டது. ஒருநாள் கோயில்  போய் திரும்பும் வழியில் மழையில் மாட்டிக்கொண்டார். அப்போது இளைஞன் ஒருவன் "சிவா சார்! இந்தாங்க குடை! வண்டியில் ஏறுங்க" என்று வீட்டில் கொண்டு விட்டான். "அம்மா உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்காங்க. நான் அவர்களுடைய கடைசி பையன் முரளி. ஷண்டிங்க்கில் வேலை செய்கிறேன். அண்ணன் லோகனும் தங்கை லோசனியும் காலேஜுக்குப் போகிறார்கள். அம்மா, என்னையும் படிக்கத்தான் சொன்னாங்க. எனக்குத்தான் படிப்பு  ஏறலை." என்றான்.

அப்பா அத்தனை பெரிய வேலையில் இருந்ததையே நினைத்துக்கொண்டு, மனம் குமையாமல் இந்தக் குழந்தைகள், தன்பலம் கொண்டு அம்பலம் ஏறுவது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக, கிரியா ஊக்கி போல் செயல்பட்டு வாழ்வில் முன்னேற்றத்தை எட்டிப் பிடிக்கும் ஆர்வமுடன் செயல்படும் இந்த குடும்பத்தை மனநெகிழ்வுடன் பார்ப்பதே அவருக்கு ஒருவிதமான மனவெழுச்சியைத் தந்தது.

ஆறு மாதம் கழித்து ஒரு நாள் அம்மாவும் பெண்ணுமாக வந்து சுரேகாவின் திருமண பத்திரிக்கை கொடுத்துப் போனார்கள். சென்னையில் வாழ்க்கைப்பட்டுப் போகிறாள். உயரப் பறக்கத் துடிக்காமல் கிடைத்ததை வரவேற்கும் பக்குவம், இந்த சிறு வயதிலேயே அமைந்துள்ளதை உணர்ந்து  வியந்தார் சிவசங்கரன். கணவரின் நண்பர்கள் மூலமாக கருணை அடிப்படையில் கிடைத்த வேலையை தன் தம்பி சந்திரனுக்குத் தரும்படி எழுதிக் கொடுத்து விட்டுப் போவதாகச் சொன்னாள். அப்பாவின் நண்பர்கள்தான் எங்கள் முன்னேற்றத்திற்கு மூலகாரணம் என்றாள்.

பலரும் தோல்வியிலும் வருத்தத்திலும் துவண்டு போவார்கள். ஆனால் இந்தக் குடும்பம்  தங்களுக்கு நேர்ந்த அவலத்தையும், தோல்வியையும் கண்டு மிரளாமல் அதை இனிமையான போராட்டமாக மாற்றி வாழ்வில் பரிமளிக்கிறது. ஆக 'தோற்றுவிட்டேன்' என்ற நினைப்புதான் தோல்வி. தோல்வியில் போராடி வெற்றிக்கனியைப் பறிப்போருக்கு, அந்த போராட்டம் ஒரு இனிமையான அனுபவம்தான்.

குழந்தையின் கோபத்தை மாற்றும் நான்கு மந்திர வார்த்தைகள்!

அன்பை அசைத்து விடாமல் இருந்தால் இலக்கை எளிதில் அடையலாம்!

‘மோஷன் சிக்னஸ்’ பிரச்னைக்கான காரணங்களும் தீர்வுகளும்!

காலம் தவறிய தேடுதல் தேவையற்றது!

நீரிழிவு நோய் வராமல் தடுக்க உதவும் வழிமுறைகள்!

SCROLL FOR NEXT