Grandmother 
மங்கையர் மலர்

சிறுகதை: துன்பங்கள் தனித்து வருவதில்லை!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்

பேருந்திலிருந்த 86 வயதான ராஜத்துக்கு நடந்ததை நினைத்து அழுகை அழுகையாக வந்தது. அதற்கு தகுந்தாற்போல் அந்து பேருந்து டி வியில் “துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் என்றும் பெண்களுக்கே” என்கிற பாடல் வரிகள் அவள் துக்கத்தை அதிக படுத்தியது.

"ஊருக்கு போகணும், பஸ் சிலவுக்கு, பணம் கொடு" என்று முதல் நாள் இரவு கேட்டதற்கு, சாரங்கனும் பத்மாவும் சொன்ன கடுமையான, வார்த்தைகள் நினைவுக்கு வந்தன...

"ஏண்டி, ஒனக்கு இங்கே என்ன கொறச்சல்?"

அன்று ராஜம் கிராமத்தில் இருந்த போது திடீர் மயக்கமாகி விட அதைப் பார்த்த எதிர் வீட்டுகாரர்,  ராஜத்துக்குக் 'கோரோனோ தொற்று இருக்கலாம்' என்று பயந்து, சாரங்கனுக்குத் தகவல் கொடுக்க, ஊர் பேச்சுக்குபயந்து, அம்மாவை அழைத்துப் போயிருந்தான் அவன் வீட்டுக்கு...

நல்ல வேளை கோரோனோ டெஸ்டில், நெகட்டிவ் என்று வந்தும், தன்னை ஒரு பாசிடிவ் கோரோனோ நோயாளி மாதிரி, தனி ரூம், தனி பிளேட், தனி டம்ளர், என்று அசிங்க படுத்திய இருவர் மீதும் கோபம் வந்தது ராஜத்துக்கு.

"எனக்குத் தான் ஒன்னுமில்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரே? 24 மணி நேரம் ரூம்ல இருக்கப் பிடிக்கல. என்னை போகவுடு. ஒரு ஐம்பது ரூபாய் கொடு..." கெஞ்சினாள் மகனிடம்.

"இங்கே என்ன குறைச்சல்? ஊருக்கு போய் மறுபடியும் கொரோனா வந்துடுச்சுன்னா யாரு செலவு பண்றது?" கோபமாகக் கேட்டான்.

"என்ன குறைச்சலா? பேச்சில் அன்பு இல்லை. சாப்பாடு போடும் போது வேண்டா வெறுப்பு! தினமும் ஹால் வந்து ஒரு டிவி பார்க்க கூட அனுமதியில்லை. மன அழுத்தம், காரணமாகச் செத்து விடுவேன் போல் இருக்கு."

'வன் கொடுமை சட்டம் பற்றிக் கேள்வி பட்டுள்ளோம். அப்படிப் புகார் கொடுக்கலாமா? ஆனால் அதே சமயம் குடும்ப மானம் போகுமே? சாரங்கன் செய்யும் நல்லதுகெட்டதுக்குக் கடவுள் அவன் கணக்கை பார்த்துப்பார். என் அந்திம காலத்தில் இப்படி ஏன் சோதனை கொடுக்கிற கடவுளே?'

கண்களில் கண்ணீர் மல்கியது ராஜத்துக்கு.

எழுபதுவருடம் வாழ்க்கையில் கிராமத்தில் பக்கத்து வீடு  மனிதர்கள் வருவதும் இவள் அவர்கள் வீட்டுக்கு போவதும் அப்படி பழக்கப்பட்டவளை, ரூமில் அடைத்து வைத்தால்?

"அவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நீங்க கதவை தட்டி, அவங்களும் வேறே வழி இல்லாமல், கதவை திறந்து உள்ளே கூப்பிட்டு, பேச போய் அவங்களுக்கு தர்ம சங்கடமான நிலையை உண்டு பண்ணி, தொல்லை கொடுக்காதீங்க... ரூமை விட்டு வெளியில் வராதீங்க..." பத்மா தன் பங்குக்கு மாமியாரை திட்டிவிட்டு போனாள்.

'மேற்கு வங்காளத்து இந்துக்கள். பெற்ற தாயையும், தந்தையையும், ஒரு பெரிய தாம்பாளத்தில் நிற்க வைத்து, பாத பூஜை பண்ணி, அந்த நீரை பருகவார்களாம். இவன் பாத பூஜை பண்ண வேண்டாம். அட்லீஸ்ட் கடும் சொற்களைப் பேசாமல் இருக்கலாமே? எள்ளை கொட்டினால் அள்ளி விடலாம் சொல்லைக் கொட்டினால்? 3 அங்குல நீள முள்ள நாக்கு, ஆறடி மனிதன் உயிரை கொல்லும்' என்கிற ஜப்பான் பழமொழியும் ஞாபகத்துக்கு வந்தது ராஜத்துக்கு.

சொத்து உள்ளது என்று கிராம கணக்குபிள்ளைக்கு, 16 வயது ராஜத்தை, இரண்டாம் தாராமாகக் கொடுத்து விட்டு, "நல்ல பெண்ணா, குடும்பம் நடத்தி எங்க பேரை காப்பாத்து " அட்வஸ் செய்தார்கள் பெற்றோர்கள். 1950களில் பாசத்தை விட குடும்பக் கவுரவம் தான் பிரதானம். மாமியார் மாமனார் கொடுமை நிறைய அனுபவித்தவள்.

பிறந்த குழந்தைகள் எல்லோருககும் கல்யாணத்தை செய்து விட்டு, திடீரென  கணவர் இறந்து போக, ஒற்றை மரமாக, வீட்டுப் பொறுப்பை, தன் மீது ஏற்றி கொண்டாள். பென்ஷன் பணத்தில் தன் தேவையை பார்த்து கொண்டாள்.

'அப்பாவோடு வாழ்ந்த, இந்த வீட்டை விட்டு, நான் எங்கும் வரமாட்டேன்' என்று பிடிவாதமாக சொல்லவே, மகள்கள் கூப்பிடுவதை நிறுத்தி கொண்டார்கள்.

அன்று காலை 10 மணி, சுகர் மாத்திரை எடுக்கும் போது, பாக்ஸின் அடியில் மெடிக்கல் பில்லின் உள்ளே 50 ரூபாய் நோட்டு சுற்றி இருந்ததை கண்டு, பரவசமானாள் ராஜம். இந்த நரகத்திலிருந்து இனி விடுதலை .

கும்பகோணம் திருவாரூர் பஸ் சார்ஜ் 35 ரூபாய், அங்கிருந்து கிராமத்துக்கு சேர 10 ரூபாய். திடீர்ன்னு முடிவு எடுத்தவள், பத்மா குளித்து விட்டு வருவதற்குள் வீட்டை விட்டு வெளியேறி பேருந்து நிலையம் வந்தாள். திருவாரூர் பேருந்து தயார் நிலையில் இருக்கவே 50 ரூபாய் பணத்தைக் கொடுத்து, டிக்கெட் வாங்கி, மீதி 10 ரூபாய் நோட்டும், 5 ரூபாய் காயினும், கண்டக்டரிடமிருந்து திரும்ப வாங்கும் போது காற்றின் வேகத்தில், பத்து ரூபாய் நோட்டு பறந்து வெளியே சென்றது. தலைவிதியை நொந்து மௌனமானள் ராஜம்.

துன்பங்கள் தனித்து வருவதில்லை. ஜோடியாகத் தான் வரும் என்று எப்பவோ படித்தது ஞாபகத்துக்கு வந்தது. காலையில் சாப்பிடாமல் கிளம்பியது தலை சுற்றியது. கையில் இருப்பதோ 5 ரூபா... நடப்பது நடக்கட்டும் .

ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்தில் கையில் உள்ள அஞ்சு  ரூபாயுடன் தன் கிராமத்துப் பேருந்தில் உக்கார்ந்து கொண்டவள், ஊர் ஜனங்கள் யாரிடமாவது 5 ரூபாய் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

"டிக்கெட் டிக்கெட்..." கண்டக்டர் "அம்மா நீங்களாம்மா! ஏம்மா தனியாக வந்தீங்க? எவ்வளவு நாள் சாப்பாடு போட்டுருப்பீங்க..." காசை வையும்மா. இந்தாங்க டிக்கெட்."

எப்போவோ செய்த சின்ன உதவி தான், நடத்துனர் அதை மறக்கமால், தன் மானத்தைக் காப்பாற்றிய மனது எங்கே? பணமிருந்தும் கொடுக்கால் தன்னைத் தவிக்க விட்ட மகன் எங்கே?

அலைபேசியில் சாரங்கனிடம், "ஊர் வந்தாச்சு. இனி நான் அங்கு வரவே மாட்டேன்..." என்று கூறியபடியே துண்டித்தாள்... தன் மகனுடனான உறவையும்தான்!

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT