இந்தியப் பெண்கள் கிரிக்கெட் டீம் மிவும் டஃப்பான அந்தப் போட்டியை வென்றிருந்தது! பிரதமர், முதல்வர் என்று அனைவரிடமிருந்தும் வாழ்த்துச் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன!
மைதானத்திலிருந்து தங்கும் ஹோட்டலுக்குத் திரும்பி, சற்றே ஓய்வெடுத்து ரெப்ரஷ் ஆன பிறகு, அந்த ஸ்டார் ஹோட்டலின் புல்வெளியில் ஹாயாக அமர்ந்து, அன்று விளையாடிய ஆட்டத்தைக் குறித்த விவாதத்தில் ஈடுபட்டனர் வீராங்கனைகள்!
முதலில் அனைவருக்கும் பொதுவான ஒரு நன்றியைத் தெரிவித்த கேப்டன், பின்னர் செஞ்சுரி விளாசி போட்டியை வெற்றிப்பாதைக்கு இழுத்துச் சென்ற விமலியை வெகுவாகவே பாராட்டினார்!
”விமலியின் செஞ்சுரி மூலம் ஜெயித்து விடலாம் என்று நம்பியிருந்த நேரத்தில், எதிர் அணி பெண் ஒருவர் 4ம் 6 மாக விளாசிப் பயத்தை ஏற்படுத்த, எங்கே வெற்றி கையை விட்டு நழுவி விடுமோ என்று எல்லோருமே பயந்திருந்த நேரத்தில், குமுதா குரங்கைப்போல் தாவிப் பிடித்த அந்த கேட்ச்தான் ஆட்டத்தை நம் பக்கம் கொண்டு வந்தது! குமுதா! ஹேட்ஸ் ஆப்!” என்று தன் அடி மனத்திலிருந்து பாராட்டி, குமுதாவின் அருகில் சென்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்! எல்லோரும் எழுந்து நின்று கைதட்ட, அந்த இடத்தை உற்சாக சுனாமி சூழ்ந்து கொண்டது!
சில நிமிடங்களுக்குப் பிறகு, கேப்டனே பேசினார்: "இப்பொழுது விமலியும், பிறகு குமுதாவும் அந்த ஆனந்தத் தருணத்தை, அந்த நேரத்தில் அவர்கள் அனுபவித்த உணர்வுகளை நம்முடன் பகிந்து கொள்ள வேண்டுமாய், என் சார்பாகவும் உங்கள் அனைவரின் சார்பாகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்."
கைதட்டல்கள் ஓய்ந்த பிறகு விமலி எழுந்து நின்று பேச ஆரம்பித்தார்! ”எப்படியும் வென்றே ஆக வேண்டுமென்ற ஒரு வெறி என்னுள்ளே பிரவாகம் எடுத்தது! என் கண்களில் பவுண்டரி லைன் மட்டுமே தெரிந்தது! என் கல்லூரி நாட்களில் என்னைக் காதலிப்பதாகச் சொல்லிச் சுற்றிச் சுற்றி வந்து, கடைசியில் பணக்காரப் பெண் கிடைத்ததும் என்னைக் கை கழுவி விட்டுப்போன மோகனின் முகம் அந்தப் பந்தில் ஒட்டியிருப்பதாக எனக்கு ஒரு நினைவு வந்தது! அவ்வளவுதான்! பந்து வந்த போதெல்லாம் முழு பலத்தையும் உபயோகித்து அடித்து விரட்டினேன்! அது பவுண்டரியாகவும், சிக்சராகவும் பறந்தது! பந்து மீண்டும் மீண்டும் வந்தபோது, அவனே என்னை நோக்கி வருவதாக எண்ணியதால் கோபம் வந்து விளாசித் தள்ளி விட்டேன்!
சற்று நேரம் சீரியசாகப் பேசிய அவள் பிறகு மெல்லச் சிரித்தபடி, "ஒரு விதத்தில் இந்த செஞ்சுரிக்குக் காரணம் ஓடிப்போன மோகன்தான்!” என்று கூறியதும், பலத்த கை தட்டல் எழும்பியது!
விமலி அமர்ந்து விட, குமுதா எழுந்தாள், பலத்த கைதட்டல்களுக்கிடையே!
“இருங்க…இருங்க…நான் பெரிசா எதையுஞ் செஞ்சிடல… விமலியைப் போலவே எனக்கும் ஜெயிக்கணுங்கற ஆர்வம் இருந்துச்சு! ஆனா எதிரி நாம எதிர்பாராத விதமா அடிக்க ஆரம்பிச்சதும் எனக்கும் பயம் வந்திடிச்சு! நான் புறப்படற சமயத்தில வீட்டுக்கு வந்த என் பாய் ஃப்ரண்ட் ப்ரபோஸ் பண்ணிட்டுப் போனான்! பெரிய ஸ்க்ரீன் விளம்பரத்தில வந்த ஓர் ஆண் என்னவனை ஞாபகப்படுத்த, வந்த பந்தில என்னவன் முகம் தெரிஞ்சாப்ல தோன்ற, அவ்வளவுதான் ‘கப்’புன்னு தாவி அவனை புடிச்சுக்கிட்டேன்! மைதானத்ல இருந்த எல்லாரும் எழும்பி நின்னுக் கை தட்டினப்பதான் நான் பந்தைப் பிடிச்சதையும், முக்கிய விக்கட் விழுந்து நாம வெற்றியை நெருங்கிட்டதையும் உணர்ந்தேன்!"
வெட்கியபடி அவள் அமர, கைதட்டல் தொடர்ந்தது!
கண்ணின் கடைப் பார்வை
காதலியர் காட்டி விட்டால்
மண்ணில் குமரர்க்கு
மாமலையும் ஓர் கடுகாம்!
என்பது பாவேந்தரின் கூற்று!
தற்போதைய கூற்று என்ன தெரியுமா?
காதலோ வெறுப்போ
காதலர்கள் காட்டி விட்டால்
இரண்டையுமே வெற்றிக்கு
இருபடிகளாய் ஆக்கிக்கொண்டு
சாதித்துக் காட்டிடுவர்
சாத்வீக நம்பெண்கள்!
இதுதானே இன்றைய நிலை! உண்மைதானே?