World Breastfeeding Week 
மங்கையர் மலர்

உலக தாய்ப்பால் வாரம் - தாய்ப்பால் விற்பனைக்கான தடை நீடிக்க வேண்டும்!

முனைவர் என். பத்ரி

தாய்ப்பாலில் அனைத்து விதமான சத்துகளும் சரியானவிகிதத்தில் இயற்கையாகவே அமைந்துள்ளன. தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக உலக தாய்ப்பால் வாரம் ஆக.1ஆம் தேதியில் இருந்து 7ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

தேசிய சுகாதார இயக்கத்தின் தரவுகள்படி, இந்தியாவில் ஓராண்டில் பிறக்கும் 2.7 கோடி குழந்தைகளில் 35 லட்சம் குழந்தைகள் குறை பிரசவமாகவும் 75 லட்சம் குழந்தைகள் எடை குறைவாகவும் பிறக்கின்றன. பிறக்கும் குழந்தைகளில் 55%  குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் கிடைக்கிறது. 

இந்தியாவில் பிறந்த ஒரு மணி நேரத்தில் 42% குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் கிடைக்கிறது. 55%  குழந்தைகள் 0-6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே குடிக்கிறார்கள். போதுமான தாய்ப்பால் கிடைத்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகளை உயிரிழப்பிலிருந்து காப்பாற்ற முடியும். குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்கள் வரை கிடைக்கும் சீம்பால் ஊட்டச்சத்துமிக்கது. தாய்ப்பால் குழந்தைகளின் முழுமையான உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும்  மிகவும் தேவை.

இரைப்பை சார்ந்த சிக்கல்கள், நிமோனியா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதுடன், சுவாசத் தொற்றிலிருந்தும் ஒவ்வாமையிலிருந்தும் குழந்தையை தாய்ப்பால் காக்கிறது. குழந்தைக்கு  சிந்தனைத் திறனையுடன், அறிவுக் கூர்மையையும் அதிகரிக்கிறது. பிறருடன் பழகுவதற்கும், தங்கள் உணர்வுகளை ஒழுங்கு படுத்திக்கொள்வதற்கும். மூளை வளர்ச்சிக்கும் தாய்ப்பால் உதவுகிறது.

தாய்ப்பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், குழந்தை பெற்றெடுத்த பிறகு வரும் மனச்சோர்வுகள் போன்றவற்றிலிருந்து தாய்மார்களைப் பாதுகாக்கிறது. குழந்தைப் பேற்றுக்குப் பிறகு மாதவிடாய் ஏற்படுவதையும், கருப்பையில் கருமுட்டை உருவாவதையும் தாமதப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் சுரக்கும்  ஆக்ஸிடோசின் ஹார்மோனால் தாயின் கர்ப்பப்பை எளிதாகச் சுருங்கி ரத்தப்போக்கைக் குறைக்கிறது. அதனால், கர்ப்பப்பை  அதன் பழைய நிலையை அடைய உதவுகிறது. தாயின்  மன அழுத்தம், எதிர்மறை மனநிலை, உயர்  ரத்த அழுத்தம் போன்றவற்றையும் இது குறைக்கிறது.

மார்புக் காம்பில் புண், வெடிப்பு, ரத்தம் வருதல், தாங்க முடியாத வலி, மார்பில் தொற்று ஏற்படுதல், சீழ் உருவாதல், போதுமான பால் இல்லாமை, தொடர்ச்சியாகப் பால் வருவதில் சிக்கல், பல மணி நேரம் குழந்தையைப் பிரிந்திருக்க வேண்டிய பணிச்சூழல் உள்ளிட்ட காரணங்களால் குறுகிய காலத்திலேயே தாய்ப்பால் கொடுப்பதை சில  தாய்மார்கள் நிறுத்து விடுகிறார்கள்.

கதிர்வீச்சு சிகிச்சை பெறுகிறவர்கள், தீவிரத் தொற்று, காசநோய் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில உடல், மன நோய்களுக்காக சிகிச்சை பெறுகிறவர்கள், கீமோதெரபி எடுக்கிறவர்கள், போதைப்பொருள், மதுவுக்கு அடிமையானவர்கள் போன்றோர் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. 

பால் கொடுக்கும் ஆவல் இருந்தாலும் பால் சுரக்கத் தூண்டுகின்ற சுரப்பி  குறைவாக இருப்பவர்கள், பால் சுரக்கும் திசுக்கள் போதுமான அளவு வளர்ச்சி பெறாதவர்கள், அறுவைச் சிகிச்சை மூலமாக மார்பளவு குறைக்கப்பட்ட தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடிவதில்லை. 

தாய்ப்பாலினை இயற்கையாக பெற முடியாத குழந்தைகள் அதை தானமாக பெற முடியும்.  தாய்ப்பாலை தானமாக வழங்குவதால் தனது குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால், தாயிடம் குறையாது. தனது குழந்தைக்கு கொடுத்தது போக மீதம் இருக்கும் பாலைத்தான் தாய்மார்கள் பொதுவாக தானமாக வழங்குவார்கள்.  தாய்க்கு பால் சுரக்காத நேரத்தில் இன்னொரு தாய்மாரிடம் பால் பெற்று வழங்குவதுதான் சிறந்த மாற்று என்று உலக சுகாதார நிறுவனமும், அறிவுறுத்துகின்றது. 

ஒரு தாயிடம் இருந்து சராசரியாக 200 மி.லி வரை தாய்ப்பால் மட்டுமே ஒரு நேரத்தில் கிடைக்கும். தாய்ப்பால் சுரக்காத தாய்மார்கள், பிற தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை தானமாகத் பெற முடியும். இவர்கள் பெரும்பாலும் தாய்ப்பால் வங்கிகளின் உதவியை நாடுகின்றார்கள். தமிழ்நாட்டில் இயங்கும் 30க்கும் மேற்பட்ட தாய்ப்பால் வங்கிகள் மகப்பேறு மருத்துவமனைகளிலும், குழந்தைகள் நல மருத்துவமனைகளிலும் அமைந்துள்ளன.

அரசு நடத்தும் தாய்ப்பால் வங்கிகளில் ஒரு நாளுக்கு 1.5 லிட்டர் முதல் அதிகபட்சம் 2 லிட்டர் வரை மட்டுமே பெற முடிகிறது. சென்னையில் பிறந்து ஆறு மாதம்கூட நிறைவைடையாத 125 குழந்தைகள் பல்வேறு காப்பகங்களில் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம், உணவுப் பாதுகாப்பு சட்டம் 2006 இன் படி, தாய்ப்பாலை பதப்படுத்துவதும் விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் தாய்ப்பாலை வணிகரீதியாக விற்பதற்கு அனுமதி வழங்குமாறு பல அமைப்புகள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையத்தை அணுகியுள்ளதாகவும் தெரிவிக்கிறது. இவ்வாறான அனுமதிகளை மாநில அரசுகள் வழங்கிட வேண்டாம் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. 

தாய்ப்பாலின் நன்மைகள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் பொருளாதார சாத்தியமுள்ள குடும்பங்கள் தாய்ப்பாலை வணிக ரீதியில் வாங்கிப் பயன்படுத்த முயல்கிறார்கள். சாமாண்ய மக்களின் குழந்தைகளுக்கு இவை கிடைப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. இந்நிலையில் அரசே இன்னும் அதிக அளவில் தாய்ப்பால் வங்கிகளை உருவாக்கி தாய்ப்பாலினைப் பெற்று பாதுகாத்து, உண்மையில் அவை தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் ஏழைக் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் தானமாக கிடைக்கும்.            

தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டால், அது பல ஏழைக் குழந்தைகளுக்கு கிடைக்காமல் போகலாம். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். இது தவிர்க்கப்பட வேண்டும். எனவே சமூக பொறுப்புள்ள  நாம் அனைவரும் தாய்ப்பால் விற்பனைக்கான தடை நீடிக்க வேண்டும் என்பதையே விரும்புவோம்.

"பயிற்சி செய் அல்லது செத்து மடி": ப்ரூஸ் லீயின் அறிவுரை!

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

SCROLL FOR NEXT