செய்திகள்

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி 1000 மீனவர்கள் போராட்டம்!

பாரதி

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பேரணியாக செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலிஸார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து கடந்த பிப்ரவரி 4ம் தேதி ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதேபோல் இரண்டு படகுகளையும் எடுத்துச் சென்றனர். கைது செய்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த வாரத்தில் அந்த 23 மீனவர்களில் 20 பேரை இலங்கை அரசு விடுவித்தது. மேலும் இரண்டு படகு ஓட்டுனர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் இரண்டாவது முறையாக கைதான ஒரு மீனவருக்கு ஒரு வருட சிறை தண்டனையும் இலங்கை நீதிமன்றம் வழங்கியது.

இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரியும், அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வர மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டும், படகுகளில் கருப்பு கொடி கட்டியும், போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கச்சத்தீவு, புனித அந்தோனியர் ஆலய திருவிழாவை நடத்தாமல் திருவிழா புறக்கணிப்பு போராட்டத்தில் இன்று ஈடுபடப் போவதாகவும் மீனவர்கள் அறிவித்தனர். இந்த போராட்டத்தின் விளைவாக இன்று காலை ஏராளமான மீனவர்களும் அவர்களின் உறவினர்களும் சேர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். மேலும் மத்திய – மாநில அரசுகள் மீனவர்களை விடுவிக்க வேண்டுமென்ற கோஷங்களை எழுப்பியப்படியே போராட்டம் செய்து வருகின்றனர்.

இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் தலைமையில் ஏராளமான போலீஸார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். துணை சூப்பிரண்டு உமாதேவி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT