மணிப்பூரின் ஜிரிபாமில் நேற்று சிஅர்பிஎஃப் நடத்திய என்கவுன்ட்டரில் 11 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர். இதன் முழு விவரத்தைப் பார்ப்போம்.
மணிப்பூரில் உள்ள குக்கி மற்றும் மெய்தி ஆகிய இனங்களுக்கு இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதில் 220 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், 1,108 பேர் படுகாயமடைந்தனர், 32 பேர் காணவில்லை. பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதேபோல் 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகின, வன்முறைகள் தொடர்பாக ஏறத்தாழ 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு படி மேலே சென்று ட்ரோன் மூலமும், ராக்கெட் லாஞ்சர்கள் மூலமும் தாக்குதல் நடத்த துவங்கினர். இதில் 11 பேர் பலியாகினர்.
மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய முதலமைச்சர் பிரேண் சிங் இல்லம் மாணவர் சங்கத்தினரால் முற்றுகையிடப்பட்டது. மணிப்பூர் ஆளுநர் இல்லமும் முற்றுகையிடப்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இப்படி இருந்தும் குக்கி பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.
நேற்று முதல் நாள் மற்றும் நேற்றும் தாக்குதல் நடத்தினர். இதனால், சிஆர்பிஎஃப் வீரர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வீரர்கள் பேசியதாவது, “எங்களுடைய முகாம் மீது இன்று மாலை, 11பேர் கொண்ட குக்கி பயங்கரவாத குழுவினர், தாக்குதல் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து நாங்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம். நாங்கள் நடத்திய தாக்குதலில், குக்கி ஆயுதக்குழுவை சேர்ந்த 11 பேரை சுட்டு வீழ்த்திவிட்டோம். மேலும் அவர்கள் வசம் இருந்த பல ஆயதங்களையும் கைப்பற்றிவிட்டோம். இந்த சம்பவத்தில் ஒரு சிஆர்பிஎப் வீரர் படுகாயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.” என்று பேசினார்.
இதுதவிர அப்பகுதியைச் சேர்ந்த 5 பேர் மாயமானதாக தகவல் வெளியானது. அவர்களை பயங்கரவாதிகள் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றிருக்கலாம் என சிஆர்பிஎஃப் வீரர்கள் சந்தேகிக்கின்றனர்.