தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல இதுவரை அரசு பேருந்துகளில் 1.20 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வசித்து தொழில் செய்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிக்க முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் 11ஆம் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளன. வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 1365 பேருந்துகள் வீதம் மொத்தம் 4675 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டவுடனே பொதுமக்கள் டிக்கெட்களை புக் செய்து வந்தனர். அந்த வகையில் இதுவரை 1.20 லட்சம் பேர் அரசு பேருந்திகளில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இருந்து மட்டும் செல்ல 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் 13ஆம் தேதியும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வெளியூர் செல்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்து உள்ளது. 10ஆம் தேதி பயணம் செய்யவே மக்கள் ஆர்வமாக உள்ளனர். அன்றைய தினம் தான் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.