ஈராக்கில் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தவகையில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியாவில் தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில், ஐந்து பேர் கொண்ட அமர்வில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தன்பாலின திருமணம் செய்பவர்களுக்கு எந்த பிரச்சனைகள் வராமலும் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும், அமைச்சரவைத் தலைமையில் ஒரு குழு அமைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்றத்திற்கு வலியுறுத்தப்பட்டது. இந்தத் தீர்ப்பை பொறுத்தவரை, தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்றுதான் சொல்லப்பட்டதே தவிர, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடக்கூடாது என்றோ அல்லது திருமணம் செய்யக்கூடாது என்றோ கூறப்படவில்லை.
ஆனால், தற்போது ஈராக்கில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டாலே கடும் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஈராக்கில் ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்டவர்களை அறிந்தாலே, அவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, அந்நாட்டில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டின் அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகள் அந்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தன. ஆகையால், அந்தச் சட்டம் தற்காலிகமாக அமலுக்கு கொண்டவராமல் இருந்து வந்தது. இதனையடுத்துதான், அந்த தண்டனை குறைக்கப்பட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும், அதற்கு ஆதரவாக வாதிடுபவர்களுக்கும் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும், திருநங்கை திருநம்பிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் ஆகியோருக்கு தண்டனை போன்ற அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.
இதனால் அந்த நாட்டில் ஓரினச்சேர்க்கையில் இருப்பவர்களுக்கும், திருநங்கை, திருநம்பிகளாக இருப்பவர்களுக்கும் சவாலான சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.