உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் ரயில்வேக்கு சொந்தமான 29 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் பள்ளிகள், வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. மசூதி, கோயில்களும் உள்ளன. மேலும் 4,000-த்துக்கும் மேலான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி 2013 ஆம் ஆண்டு பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது. இதனிடையே இந்த ஆக்கிரமிப்புகளை ரயில்வே சர்வே எடுத்தது.
ஹல்த்வானி மாவட்ட நிர்வாகம், குடியிருப்பாளர்கள் ஜனவரி 9 ஆம் தேதிக்குள் தங்கள் பொருள்களை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு காலி செய்யுமாறும் இல்லாவிட்டால் ஆக்கிமிப்பு செய்யப்பட்ட இடங்கள் இடிக்கப்படும் என்று தெரிவித்தது.
இதனிடைய அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களை அப்புறப்படுத்தக்கூடாது என்று கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். இப்பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்று கூறப்படுகிறது.
பா.ஜ.க. ஆட்சி செய்துவரும் உத்தரகண்டில், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான ஹரீஷ் ரவாத், ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டேராடூனில் உள்ள தனது வீட்டில் மெளனப் போராட்டம் நடத்தினார். ஆக்கிரமிப்புகளை இடிக்கும் அரசின் முடிவால் 50,000-த்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், அந்த இடம் ரயில்வேக்கு சொந்தமான இடம் இல்லை என்றும் அங்கு குடியிருப்புகள் உள்ளன. அவற்றுக்கு குடிநீர் மற்றும் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறிவருகின்றனர்.
இதனிடையே சர்ச்சைக்குரிய இடம் 29 ஏக்கர் மட்டுமே. ஆனால், ரயில்வே 78 ஏக்கர் பரப்பளவில் வசித்து வரும் மக்களை ஆக்கிரமிப்பு என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை எப்படி ஏற்கமுடியும். இதனால் 50,000 பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனிடையே இது தொடர்பான வழக்கு வியாழக்கிழமை (ஜன. 5) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் எஸ்.கே.கெளல், அபே எஸ்.ஓகா அடங்கிய அமர்வு, ஹல்த்வானியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.
முதலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலம் ரயில்வேக்கு மட்டும் சொந்தமானதா அல்லது அரசு நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 50,000 பேரை ஒரே இரவில் வெளியேற்றிவிட முடியாது. இது தொடர்பாக மாநில அரசும், ரயில்வேயும் கலந்து ஆலோசித்து நடைமுறைக்கு சாத்தியமான ஒரு தீர்வுகாண வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.