Polling 
செய்திகள்

நாடு முழுவதும் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 64 சதவீத மக்கள் வாக்குப்பதிவு!

பாரதி

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட நேற்று நாடு முழுவதும் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 64 சதவீத மக்கள் வாக்குப்பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் நேற்று 102 தொகுதிகளில், லோக்சபா தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதாவது, தமிழகம், உத்தரகண்ட், அருணாசல பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம் உட்பட மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதற்காக ஒரு லட்சத்து 87 ஆயிரம் வாக்குச்சாவடிகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டன.

இந்த வாக்குப்பதிவில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்தனர். சிலருக்கு வாக்கு இல்லை என்றும் சில புகார்கள் எழுந்தன.

நாடு முழுவதும் வயதானவர்கள், உடம்பு முடியாதவர்கள் என அனைவருமே தங்கள் ஜனநாயக கடமையை உரிமையாக ஏற்று வாக்களித்தனர். சில புகார்கள் மற்றும் சிறிய சிறிய பிரச்சனைகளைத் தவிர நாடு முழுவதும் அமைதியாகவே தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத மக்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது.

அந்தவகையில், திரிபுரா மாநிலத்தில் 80.6 சதவீத வாக்குகள் அதிகபட்சமாக பதிவாகிவுள்ளன. அதேபோல் மிகக் குறைவாக பீகார் மாநிலத்தில் 48.5 சதவீதம் மட்டுமே வாக்குப் பதிவாகிவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 72.9 சதவீத மக்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 81.04 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையைப் பொறுத்தவரை இந்தமுறை குறைவான அளவே வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “தேர்தல் ஆணையம் சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புறநகர் பகுதிகளிலிருந்து மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர். ஆனால், நகர்ப்புறத்தில் உள்ள மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. இதன்காரணமாகத்தான் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.” என்று பேசினார்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT