கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்போது, கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற மாற்றுத்திறனாளிப் பெண் தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்துக் கூறிய தனலட்சுமி, "எங்கள் வீட்டு பக்கத்து இடத்துக்காரர் குட்டையிலிருந்து ஆற்றுக்குப் போகும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார். இதனால் எனது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம், ஊர் தலைவர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பலமுறை புகார் செய்தும் பலன் இல்லாததால்தான் இன்று இங்கு தர்ணாவில் ஈடுபட்டு இருக்கிறேன்" என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து காவல்துறையினர் தனலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பந்தயசாலை காவல் ஆய்வாளர் சாந்தகுமார், தனலட்சுமியின் மனுவை வாங்கிப் பார்த்துவிட்டு, "உங்கள் மனு நியாயமானதுதான். அதிகாரியிடம் அழைத்துச் செல்கிறோம்" என்றவர் சற்று தொலைவு கூட்டிச் சென்றதும், ``தேவையில்லாமல் பிரச்னை செய்தால் உன்னை ரிமாண்ட் செய்துவிடுவேன். ஜாக்கிரதை. உன்னைப்போல் ஆயிரம் பேரைப் பார்த்திருக்கிறேன், போ’’ என ஒருமையில் பேசி மிரட்டி இருக்கிறார். அதோடு, பெண் காவலர் ஒருவர் மாற்றுத்திறனாளியான தனலட்சுமியின் கையைப் பிடித்து இழுத்து இருக்கிறார். அதனால் தனலட்சுமி சற்று நிலைதடுமாறி உள்ளார்.
அதையடுத்து தனலட்சுமி, "எதற்காக என்னை ரிமாண்ட் செய்வீங்க. எத்தனை முறை மனு கொடுத்திருக்கிறேன். ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணிடம் அராஜகம் செய்கிறீர்களே?" என கேட்டு இருக்கிறார். அதைத் தொடர்ந்து தனலட்சுமியை சமாதானப்படுத்திய அவர்கள், ஆட்சியரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை, ஆய்வாளர் ஒருவர் ஒருமையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொறுப்பற்ற முறையில் பேசிய காவலரின் செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.