கொரோனா காலத்தில் இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புது வகையான பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வுலகில் எண்ணற்ற உயிரினங்கள் உள்ளன என்றாலும், அதில் கால் வாசிக்கூட நமக்குத் தெரியாது. ஆனால், இன்னும் ஏராளமான உயிரினங்கள் நமது பார்வையிலிருந்து மறைந்திருக்கின்றன. இல்லை… நாம் அதன் பார்வையிலிருந்து மறைந்திருக்கிறோம். ஆகையால், அன்றாடம் எதாவது புதுபுது உயிரினத்தின் அடையாளம் வெளியே தெரிந்துதான் வருகிறது. அதுவும் மனிதர்கள் கண்களில் பட்டால்போதும் உடனே அதனைப் பிடித்து எந்த மாதிரியான உயிரினம் என்பதை ஆராய்ச்சி செய்துப் பார்த்துவிடுவோம். ஆனால், அது நம்மைப் பார்த்துவிட்டால், எதோ ஒரு உயிரினம் போகிறது என்று கடந்துச் சென்றுவிடும்.
சரி, விஷயத்திற்கு வருவோம்... கொரோனா ஊரடங்கு காலத்தில் மேற்கு இமயமலை பகுதியில் விரேந்திர பரத்வாஜ் என்பவர் புதிய வகை பாம்பு ஒன்றைக் கண்டுபிடித்தார். அந்தப் பாம்பை எடுத்துச் சென்று, அது எந்த பாம்பு இனத்தைச் சேர்ந்தது என்று ஆராய்ச்சி செய்துப் பார்த்தார். ஆனால், உலகில் இதுவரை கண்டுபிடித்த எந்த பாம்புகளைப் போலவும் இது இல்லாததால் அந்த பாம்பினைப் போட்டோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார்.
இதனையடுத்து அந்த பாம்பினை குறித்த அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வில், இந்த வகையான பாம்பு உலகில் வேறு எந்த இடத்திலுமே இல்லை என்றும், இது இமயமலையில் மட்டுமே காணப்படும் பாம்பு என்றும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர். இது தொடர்பாக நடப்பாண்டின் தொடக்கத்தில் சயிண்டிபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இது சர்வதேச நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
அந்தவகையில், இந்த புதிய வகை இமயமலை பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயரை குறிக்கும் விதமாக 'ஆங்குவிகுலஸ் டிகாப்ரியோய்' (Anguiculus dicaprioi) என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர் டைட்டானிக் படத்தில் ஜாக்காக நடித்தவர். மேலும் நிறைய நல்ல படங்களை உலகிற்கு கொடுத்தவர்.
ஏன் அந்த பாம்பு இனத்திற்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றால், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் லியோனார்டோ டிகாப்ரியோவின் ஆர்வம் மற்றும் பங்களிப்பை போற்றும் வகையில் அந்த பாம்பு இனத்திற்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவர் உலகளாவிய காலநிலை மாற்றம், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சுழல் மாசுபாடு காரணமாக மனித உடலில் ஏற்படும் பிரச்னைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.