Actor Delhi Ganesh 
செய்திகள்

சினிமா ரசிகர்களின் மனங்களில் என்றும் வாழும் நடிகர் டெல்லி கணேஷ்!

கல்கி டெஸ்க்

மிழ் சினிமா ரசிகர்களில் மனங்களில், அதுவும் 90களில் வெளிவந்த பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் பல்வேறு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து மக்களின் மனங்களில் நீங்க இடம் பிடித்தவர் நடிகர் டெல்லி கணேஷ். சுமார் 90 நாட்களுக்கு முன்புதான் 80 வயதைக் கடந்து சதாபிஷேகம் கண்ட இவர், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை அவரது தனது ராமாபுரம் இல்லத்தில் காலமானார். தூக்கத்திலேயே உயிர் பிரிந்த அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு கிராமத்தில் 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி பிறந்த இவர், டெல்லியை சேர்ந்த ‘தட்சிண பாரத நாடக சபா’ எனும் குழுவில் உறுப்பினராக இருந்ததால், கணேஷ் என்று அழைக்கப்பட்ட இவரை அனைவரும் ‘டெல்லி கணேஷ்’ என்று அழைத்தனர். இந்திய விமானப் படையில் பத்து ஆண்டுகள் பணியாற்றிய இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, 1974ம் ஆண்டு இந்திய விமானப் படையில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து 1977ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘பட்டினப்பிரவேசம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தான் நடித்த சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி போன்ற படங்களில் தனது வேறுபட்ட கதாபாத்திர நடிப்பால் மக்களின் இதயங்களைக் கவர்ந்தார்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு, உலக நாயகன் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த இவர், தனது சிறந்த நடிப்புத் திறமையால், 1979ம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். அதுமட்டுமின்றி கலைமாமணி விருதையும் இவர் பெற்றிருக்கிறார். தமிழ் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் மற்றும் விஷாலுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார். சினிமா மட்டுமின்றி, இவர் பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

தனது கடைசி காலம் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பிய டெல்லி கணேஷ், இந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’, சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 மற்றும் விஷால் நடித்த ‘ரத்னம்’ திரைப்படங்கள் வரை நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞர்களுக்கு என்றுமே மரணம் கிடையாது. இந்த மண்ணில் அவர் மறைந்தாலும் அவரது நடிப்பும், திறமையும் என்றுமே சினிமா ரசிகர்களால் நினைவில் கொள்ளப்படும். அவரது ஆன்மா சாந்தி அடைய ‘கல்கி குழுமம்’ தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

காலிஃப்ளவர் சமைக்கும் முன் இதை செய்யத் தவறாதீர்கள்! 

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

SCROLL FOR NEXT