பிரபல நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவருமான முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் இன்று விமானத்தில் பயணித்து திருச்சி செல்வதற்காக விமான நிலையத்துக்கு வருகை தந்தார். அப்போது பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்துக் கொண்டு இருந்தனர். அப்போது கருணாஸ் தம்மோடு கொண்டு வந்திருந்த கைப்பையை அதிகாரிகள் சோதனையிட்டபோது அந்த கைப்பையில் வெடிபொருள் இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதனையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கைப்பை தனியே எடுத்து வைத்துவிட்டு கருணாஸிடம் விசாரித்தனர். ஆனால் கருணாஸ், ‘அந்தக் கைப்பையில் அபாயகரமான பொருட்கள் எதுவும் இல்லை’ எனக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்தக் கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, அதில் இரண்டு பெட்டிகள் இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் 20 துப்பாக்கிக் குண்டுகள் என மொத்தம் 40 வைவ் துப்பாக்கிக் குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவை அனைத்தும் கைத்துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய, 32 எம்எம் ரக குண்டுகள் ஆகும். அதைத் தொடர்ந்து அந்தத் துப்பாக்கிக் குண்டுகளை விமான பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடிகர் கருணாஸிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இது சம்பந்தமாக நடிகர் கருணாஸ் கூறும்போது, "நான் துப்பாக்கி லைசென்ஸ் ஹோல்டர். என்னிடம் உள்ள கைத்துப்பாக்கியில் பயன்படுத்துவதற்கான குண்டுகள் இவை. விமானத்தில் குண்டுகளை எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதி இருப்பது எனக்கும் தெரியும். ஆனால், நான் வீட்டிலிருந்து அவசரமாகப் புறப்பட்டதால் பையில் இருந்த துப்பாக்கி குண்டுகளை நான் கவனிக்கவில்லை" என்று கூறியதாகத் தெரிகிறது. மேலும், தனது துப்பாக்கி லைசென்ஸை புதுப்பித்த ஆவணங்களையும் அவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் காட்டி உள்ளார்.
அதையடுத்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், “பாதுகாப்பு விதிமுறைகளின்படி விமானத்தில் துப்பாக்கி குண்டுகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. எனவே, இந்த விமானத்தில் உங்களைப் பயணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியதோடு, நடிகர் கருணாஸின் திருச்சி விமான பயணத்தையும் ரத்து செய்தனர்.
அதுமட்டுமின்றி, பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக திருச்சி செல்லவிருந்த இந்த விமானம் சுமார் அரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.