செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்த துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கீடு!

கல்கி டெஸ்க்

மிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். தற்போது அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதயத்தில் மூன்று முக்கிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி இந்த அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டும் என்று கோரி இருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவின்படி அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி இரண்டு துறைகளுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்று இருந்தார். தற்போது அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருப்பதாலும், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாலும் அவர் வகித்து வந்த இரண்டு துறைகளுக்கான அமைச்சர் பொறுப்பை இருவேறு அமைச்சர்களிடம் கூடுதலாக ஓதுக்கி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, ஏற்கெனவே வீட்டு வசதித் துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமியிடம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை கூடுதலாகவும், நிதி அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசுவிடம் மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு ஆகிய துறைகளை கூடுதலாக ஒப்படைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான கோப்புகள் தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.

இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்!

பெண்களுக்கு கைமேல் பலன் தரும் கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு!

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து… 8 பேர் பலி!

தொலைதூரப் பயணங்கள் முடிவதில்லை… தொடரும்…!

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT