சுமார் 2 மணி நேரம் இதய துடிப்பே இல்லாமல் இருந்த ராணுவ வீரரின் உயிரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள்.
மருத்துவத்துறையில் அவ்வப்போது பிரமிக்கும் வகையில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுதான் வருகின்றன. சென்ற உயிரைக்கூட இழுத்துப் பிடித்துக் கொண்டு வந்து உடலில் திணிக்கும் விதமாகத்தான் மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் செப்டம்பர் 30 அன்று இதய பிரச்சினை காரணமாக ரான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைக்கான போதிய கருவிகள் இல்லாததால், மேம்பட்ட சிகிச்சைக்காக AIIMS மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவர் AIIMSக்கு வந்தவுடன், தீவிர சிகிச்சை மற்றும் ECMO பிரிவில் உள்ள நிபுணர் டாக்டர் ஸ்ரீகாந்த் பெஹரா, சுபகாந்த் மாரடைப்பு ஏற்பட்டதை உறுதிப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து 40 நிமிடங்கள் சிபிஆர் செய்தும் அவரின் இதயத்துடிப்பை மீட்டெடுக்க முடியவில்லை. பொதுவாக இதுபோன்ற சமயத்தில் விஷயம் கைமீறிப்போய்விட்டதாக மருத்துவர்கள் கூறிவிடுவர். ஆனால், அதையும் மீறி இங்கிருந்த மருத்துவர்கள் ஒரு முடிவை எடுத்தனர். அதாவது இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை செயற்கையாகத் தக்கவைக்கும் மேம்பட்ட ECPR (Extracorporeal Cardiopulmonary Resuscitation) செயல்முறையைத் தொடர AIIMS மருத்துவக் குழு முடிவு செய்தது.
இந்த முயற்சியிலும் இரண்டு மணி நேரமாக அவருக்கு இதய துடிப்பே இல்லை. ஆனால், இடைவிடாதப் போராட்டத்திற்கு பிறகு 2 மணி நேரம் கழித்து மீண்டும் இதயம் துடிக்க ஆரம்பித்தது. முதலில் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு இருந்தது. பின் 30 மணி நேரத்தில் அவரது இதயத் துடிப்பு கணிசமாக சீரானது. 96 மணி நேரத்திற்குள், சுபகாந்த் ECMO இயந்திரத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டார்.
ஆனால், இது இவரது நுரையீரல்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் சற்று பாதிப்பை ஏற்படுத்தியதால், ஒரு மாதம் முழுவதும் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பு தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் இதுபோல 2 மணி நேரம் இதயத்துடிப்பு இல்லாத ஒருவரை காப்பாற்றுவது இந்தியாவில் மிக மிக அரிது என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
நாட்டைக் காக்கும் நாணுவ வீரரின் உயிரைக் காத்து நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக மருத்துவர்கள் செயல்பட்டது பாராட்டுக்களை பெற்று வருகிறது.