இன்று ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்றார். அந்த நிகழ்ச்சியில் அமித்ஷா, தமிழிசையை அழைத்து கடுமையான முகத்துடன் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், பின்பு புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். சமீபத்தில் இவர் சில விஷயங்களை வெளிப்படையாக பேசியிருந்தார்.
தமிழ்நாடு பாஜகவிலேயே சமூக வலைதளப் பிரிவினர், சொந்த கட்சித் தலைவர்களையே விமர்சிப்பதாக குற்றம் சாட்டியதுடன், முன்னாள் தலைவர் என்ற முறையில் நடவடிக்கை எடுப்பேன் என தமிழிசை எச்சரித்தார். தமிழிசையின் இந்த எச்சரிக்கைக்கு, தற்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்தனர்.
இன்னும் சொல்லப்போனால், அண்ணாமலைக்கு எதிராக வேறு சில பாஜக நிர்வாகிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், கட்சிக்குள்ளேயே மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில், டெல்லி பாஜக மேலிடம் தமிழக பாஜக தலைவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இப்படி ஒரு சூழல் நிலவி வரும் நிலையில், இன்று விஜயவாடா விமான நிலையம் அருகே சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்கும் விழா நடைபெற்றது. சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அமித்ஷாவை சந்தித்து, தமிழிசை வணக்கம் கூறினார். பின்னர் தம்மை கடந்து சென்ற தமிழிசையை அழைத்து சில நிமிடங்கள் அமித்ஷா கண்டிப்பான குரலில் கை விரல்களை உயர்த்தியபடி பேசினார். இதற்கு தமிழிசை சவுந்தரராஜனும் தொடர்ந்து அமித்ஷாவிடம் விளக்கம் கொடுத்து வந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதாலும், இதனால் பா.ஜ.க-வில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாகவும் தமிழிசையை அமித்ஷா கண்டித்ததாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.