ராஜஸ்தானின் 'லேடி டான்' மற்றும் 'மேடம் மின்ஸ்' என்று பிரபலமாக அறியப்படும் ரிவால்வர் ராணியான அனுராதா சௌத்ரி என்பவர் கலா ஜாதேடி என்கிற கேங்ஸ்டர் சந்தீப்பை திருமணம் செய்துகொண்டது தற்போது பேசப்படும் செய்தியாக வலம் வருகிறது.
பல குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு காவல் பிடியில் உள்ள இவர்கள் இருவரும் திருமணத்தில் இணைந்தது குறித்து பலவித தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இருவரும் கடந்த செவ்வாய் அன்று டெல்லியில் உள்ள துவாரகா செக்டார்–3ல் திருமணம் செய்து கொண்டனர். கடுமையான குற்றப் பின்னணி கொண்ட இவர்களின் திருமணத்தை முன்னிட்டு எவ்விதக் கலவரங்களும் எழாமல் தடுக்க, துவாரகா செக்டார்-3ல் உள்ள சந்தோஷ் கார்டனைச் சுற்றியுள்ள திருமண அரங்கில் 250க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப் பட்டனர் . மேலும், டெல்லியின் சிறப்புக் காவல்துறையின் மேற்பார்வையில் மண்டபம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இவர்கள் திருமண விழாவிற்காக துவாரகா செக்டார்-3ல் உள்ள சந்தோஷ் கார்டனின் மண்டபம் 51000 ரூபாய்க்கு சந்தீப்பின் வழக்கறிஞர் ரோஹித் தலால் என்பவரால் பதிவு செய்து இருந்ததாக தகவல்கள் வந்துள்ளன.
ஜூலை 2021ல் உத்திரபிரதேசத்தில் உள்ள சகரன்பூரில் இந்த இருவரும் ஒன்றாக கைது செய்யப்பட்டது பிரபலமான செய்தியாகும். பின்னர் அனுராதாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஜாதேடிக்கு மனிதாபிமான அடிப்படையில் டெல்லி நீதிமன்றம் அவரின் திருமணத்திற்காக ஆறு மணி நேரம் பரோல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஹரியானாவை சேர்ந்த இருவரும் குற்றவியல் நிகழ்வொன்றில் சந்தித்து காதல் வயப்பட்டனர் என்றும் பின்னர் அனுராதா இவருடன் இணைந்து செயல்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஜாதேடி டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் ஈடுபட்டவர் என்றும் இவர் மதுபான வியாபாரிகளிடம் பணம் பறிப்பதில் வல்லவரான ஹரியானாவின் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஸ்னோவின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. அனுராதா சௌத்ரியும் இவரது குழுவில் ஒருவராக கொலை, கொள்ளை, கடத்தல்களில் ஈடுபட்டவராவார்.
1987ல் அரசு அதிகாரியின் மகளாகப் பிறந்த அனுராதாவின் இளமைப்பருவம் எல்லாக் குழந்தைகள் போலவே இருந்தது. படிப்பிலும் அறிவிலும் சிறந்து விளங்கி கணிணித் துறையில் பட்டம் பெற்றுள்ளார் அனுராதா. இவரது முதல் திருமணம் தீபக் மின்ஞ் என்பவருடன் நடைபெற்று இருவரும் செய்த ஷேர் பிஸினஸ் ஏமாற்றத்தால் அனுராதாவின் வாழ்வே திசை மாறியது என்கிறது இவரைப் பற்றிய தகவல்கள். பின்னாட்களில் நிகழ்ந்த விரும்பத்தகாத மாற்றங்களினால் அந்த அறிவு குற்றங்களில் ஈடுபட பயன்பட்டது. வெகு விரைவில் தனது குற்றச்செயல்கள் மூலம் அனுராதா ரிவால்வர் ராணியாகவும் மக்கள் முன் அறியப்பட்டார். சமூகத்தின் முன் குற்றவாளிகளாக அறியப்படும் இவர்களின் காதல் வெற்றி பெற்றதுடன் பலத்த காவலுடன் நடைபெற்ற இவர்களின் திருமணம் பேசப்படுவதில் ஆச்சரியமில்லை.
2014 ஆம் ஆண்டு வெளிவந்த ரிவால்வர் குயின் (தமிழில் ரிவால்வர் ராணி) எனும் இந்தித் திரைப்படத்தில் ரிவால்வர் ராணியாக பல விருதுகளைப் பெற்ற பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடித்திருப்பார். சாய் கபீர் எழுதி இயக்கிய இந்தி திரைப்படம் குற்றப் பின்னணியில் நகைச்சுவை காட்சிகள் கொண்ட திரைப்படமாகும். கங்கனா ரனாவத் மற்றும் வீர் தாஸ் ஆகியோர் நடித்துள்ள இது அரசியலை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட நையாண்டி காதல் கதையாகும். 25 ஏப்ரல் 2014 அன்று வெளியிடப்பட்ட இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. (அப்போது பிரபலமாக இருந்த அனுராதா சௌத்ரியின் வாழ்க்கை அடிப்படையில் இதை எடுத்திருக்கலாம் என்ற அனுமானமும் உண்டு.)