துணை முதல்வர் உதயநிதி குறித்து சீமான் பேசியுள்ளார். அதாவது கருணாநிதி பேரன் என்பதை தவிர்த்து உதயநிதியிடம் வேறு என்ன தகுதி உள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
கரூர் ஒட்டிய வெண்ணைமலையில் அமைந்துள்ள சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்கும் பணியில் அறநிலைத்துறை ஈடுபட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சீமான் கரூர் சென்றார். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சீமான் தங்கியிருந்த விடுதிக்கே மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நடந்தே வந்தனர். அப்போது போலீஸார் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் சீமான் வெளியே வந்து மக்களிடம் பேசினார். அறநிலைத்துறையினரின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், “சமூக நீதி பேசும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஏன் கோவி செழியனுக்கு அமைச்சரவையில் இடம் தரவில்லை. திராவிடம் என்ற வார்த்தை இருப்பதால்தான் கருணாநிதி இந்தப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தார். கருணாநிதி பேரன் என்பதைத் தவிர உதயநிதிக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது. பிறப்பினால் ஒருவர் பதவிக்கு வர முடியுமென்றால் அதுதான் மிகப்பெரிய சனாதனம்.
மற்ற எந்த மாநிலத்தின் முதல்வர்களையும் சந்திக்காத பிரதமர் அடிக்கடி தமிழக முதல்வரையும் துணை முதல்வரையும் சந்திக்கிறார். எனவே, திமுக பாஜக நெருக்கமாகத்தான் உள்ளனர். டாஸ்மாக் கடைகளில் 3500 கவுன்டர்கள் திறக்கப்படும் என்ற செய்தியை அடுத்து அன்புமணி அதற்கு கண்டனங்கள் தெரிவித்தார். அதனை திசை திருப்பும் விதமாக தமிழ்த்தாய் பிரச்னையை கையில் எடுத்துள்ளனர்.” என்று பேசினார்.
மேலும் விஜய் குறித்து பேசிய அவர், “ நான் களத்தில் வேகமாக ஓடுபவன். விஜய் எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பவர். தவெக மாநாட்டுக்கு கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள் வர வேண்டாம் என விஜய் கூறியது அக்கறையில் சொன்னது. அதை வரவேற்கிறேன், விஜய்க்கு என் பாராட்டுக்கள். “ என்றார்.
இதனையடுத்து அவர் தங்கும் விடுதியை சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.