சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சிறந்த மருத்துவமனைக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநகரம் சிறப்பாக செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தரவரிசைப் பட்டியலை மாதம் தோறும் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலின்படி சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 38 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை வழங்குவதற்கு சில தர அளவுகோல்களை நிர்ணயித்து கணக்கீடு செய்கிறது தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குநரகம்.
அந்த அடிப்படையில் கடந்த 2022 ஏப்ரல் மாதத்திலிருந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது.
இந்தப் பட்டியல் எப்படி கணக்கிடப்படுகிறது என்றால், மருத்துவமனையில் உள்ள துறைகளின் எண்ணிக்கை, பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை, படுக்கை வசதிகள், ஒருநாளைக்கு நடைபெறும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை, குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை , உயிரிழப்பு ஆகிய அனைத்து காரணிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டே இந்த தர மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவனையை பொறுத்தவரை நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 10,000 பேர் முதல் சில நாட்களில் 16,000 பேர் வரை கூட புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக 2500 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதயவியல் துறை உள்ளிட்ட முதன்மையான துறைகளில் மட்டுமே ஒருநாளைக்கு 66 அறுவை சிகிச்சைகளும், சாதாரண அறுவை சிகிச்சைகள் 37 , அவசர அறுவை சிகிச்சைகள் 30 என ஒருநாளின் சராசரியாக 130 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
புற்றுநோய்க்கான கீமோ சிகிச்சை எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை மட்டுமே தினசரி 50 என்பது குறிப்பிடத்தக்கது. 113 பேருக்கு ஒருநாளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படும் இடமாக 24 மணி நேரமும் டயாலிசிஸ் யூனிட் இங்கு செயல்பட்டு வருகிறது.
தர வரிசை கணக்கீடு வெறும் சிகிச்சை பெற்றுவோரின் அதிக எண்ணிக்கையை பொறுத்தது மட்டுமல்லாமல், மருத்துவக் கட்டமைப்பிற்கு ஏற்ப நோயாளிகளை பலன் பெறச் செய்திருந்ததால் இந்த தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.