இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 5 ஜிக்கு தயாராகி இரண்டு வருடங்களாகிவிட்டது. 1800 மெகா ஹெர்ட்ஸ் தாராளமயமாக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் பேண்ட் மூலம் ஹைதராபாத்தில் நேரடி 5 ஜி சேவைகளை ஏர்டெல் சோதனை செய்து நிரூபித்தது. ஜியோவும் களத்தில் இறங்கி, 5ஜி பணிக்கான பணிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கின்றன.
இந்நிலையில் குறைந்தபட்ச இணைய வேகம் தரப்படவேண்டியது பற்றிய விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியா முழுவதும் குறைந்தபட்சம் 2 எம்.பிபிஸ் வேகம் தரவேண்டிய நிர்பந்தம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. வீடியோ, அதிக டேட்டாவை தரவிறக்கும் ஆப் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் குறைந்தபட்சம் 2 எம்பிபிஎஸ் வேகம் என்பது அவசியமாகிவிட்டது.
இன்றைய நிலையில் பெருநகரங்களில் அதிக வேக இணைப்பும், நடுத்தர நகரங்களில் ஓரளவு வேகம் கொண்ட இணைப்புகளும் கிடைக்கிறது. ஆனால், கிராமங்களில் 512 கேபிபிஎஸ் வேகத்தை கூட தரமுடியாத அளவுக்கு நிலை இருந்து வருகிறது. இந்தியாவில் 45 ஆயிரம் கிராமங்களில் இன்னும் 4 ஜி இணைப்பு கூட தரப்படவில்லை என்கிறார்கள். இதில் 5 ஜி வந்தாலும் என்ன பலன்?
கடந்த ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி, 8 கோடி பேர் பிராட்பேண்ட் வசதிகளை பயன்படுத்துகிறார்கள். இதில் 7 கோடி பேர் வயர்லெஸ் பிராட்பேண்ட் பயன்படுத்துபவர்கள். ஏறக்குறைய ஒரு கோடி பேர் வயர் இணைப்புடன் கூடிய பிராட்பேண்ட் வசதியையே பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு கோடி பேரை வயர்லெஸ்க்கு மாற்றினால் மட்டுமே 5ஜி சேவையை முழுவதுமாக பயன்படுத்த முடியும்.
சீனாவில் இருப்பது போல் தொலைத் தொடர்பு கட்டமைப்பு இந்தியாவில் சிறப்பாக இல்லை என்பது உண்மைதான். அதை வலுவாக கட்டமைத்தால் மட்டுமே 5 ஜியை பரவலாக்க முடியும். கட்டமைப்பு குறித்த திட்டங்களில் சாலை வசதி, தண்ணீர் வசதி மட்டுமல்ல தொலைத் தொடர்பு வசதியையும் இணைத்து பார்த்தால் மட்டுமே இலக்கை எட்ட முடியும் என்கிறார்கள்.
தொலைத் தொடர்பு இணைப்பைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகமாகிக் கொண்டுதான் இருக்குமே தவிர குறையப்போவதில்லை. ஆகவே, வலுவான தொலைத் தொடர்பு கட்டமைப்பை உருவாக்குவதை ஒரு முக்கியமான முதலீடாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது. 5ஜி, 2023 இறுதிக்குள் இந்தியா முழுவதும் வந்துவிடும் என்கிறார்கள். கிராமங்களில் எந்தளவுக்கு எடுபடும்? அதுதான் மில்லியன் டாலர் கேள்வி.