PM Modi 
செய்திகள்

3 மாநில முதல்வர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறும் பா.ஜ.க!

ஜெ.ராகவன்

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்பார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், தெலங்கானாவில் வெற்றிக்கு வழிவகுத்தவர் ரேவந்த் ரெட்டி. அவருக்கு சோனியா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் அவரை முதல்வராக நியமிக்க முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் டிச.7 இல் முதல்வராக பதவியேற்கிறார் என்று தெரிவித்துள்ளார். 

மிஜோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) அமோக வெற்றிபெற்றதை அடுத்து அதன் தலைவர் லால்டுஹோமா முதல்வராவது உறுதியாகிவிட்டது. 40 பேர் கொண்ட தொகுதியில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆளும் மிஜோ தேசிய முன்னணிக்கு 10 இடங்களே கிடைத்துள்ளன. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தலா இரண்டு இடங்களில் வென்றுள்ளன. மிஜோரத்தில் லால்டுஹோமா, மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். அநேகமாக அவர் டிச.8 ஆம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்று தெரிகிறது.

எனினும் முக்கிய மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பா.ஜ.க. வென்று ஆட்சியைப் பிடித்தும் அந்த மாநிலங்களை ஆளப்போகும் முதல்வர் யார் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது.

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே, திவ்யகுமாரி, பாபா பாலக்நாத் ஆகியோரின் பெயர் முதல்வர் பதவிக்கும் அடிபடுகின்ற போதிலும் முடிவு எடுப்பது சவாலாக உள்ளது. சத்தீஸ்கரில் மூத்த அரசியல் தலைவர் ரமன் சிங் முதல்வராக நியமிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல மத்தியப் பிரதேசத்தில் நான்குமுறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் செளஹான் மீண்டும் முதல்வராகலாம் என்று சொல்லபடுகிறது.

எனினும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஏற்கெனவே முதல்வராக இருந்தவர்களை மீண்டும் தேர்வு செய்யாமல் புதுமுகங்களாக தேர்ந்தெடுத்து வாய்ப்பு அளிக்க பா.ஜ.க. திட்டமிட்டு வருவதாகவும் அதன் காரணமாகவே முதல்வரை தேர்ந்தெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கமல்நாத், தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இதற்காக தில்லி சென்றுள்ள அவர், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி எம்.பி இருவரையும் சந்தித்து, பதவி விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT