Nipah virus  
செய்திகள்

'நிபா வைரஸ்' - தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்க முடியுமா?

தா.சரவணா

நிபா வைரஸ் தாக்கம் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்கும் வண்ணம் கேரள எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவில் இருந்து காய்ச்சல் அறிகுறிகளுடன் யாராவது தமிழகத்துக்குள் நுழைந்தால் அவர்களை எல்லையிலேயே மாநில சுகாதாரக் குழுவினர் நிறுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பதை அந்த மாநில சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் 300க்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாலக்காடு மாவட்டத்தில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் நிபா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "இப்போது தமிழகத்தில் அச்சப்படக்கூடிய சூழல் ஏதுமில்லை. அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் உடன் யாராவது அனுமதிக்கப்பட்டால் உடனடியாக தகவல் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்றனர்.

இதற்கு இடையே பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில்,

  • தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலை தடுக்க கேரள எல்லையோர மாவட்ட சோதனை சாவடிகளில் மருத்துவ கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும்.

  • சுகாதாரத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

  • எல்லையோர மாவட்டங்களில் கண்டறியப்படும் காய்ச்சல் குறித்தான முழு தகவல்களையும் பொது சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  • கேரளத்தில் இருந்து வருவோருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தான் தமிழகத்துக்கு நுழைய அனுமதிக்க வேண்டும்.

  • தொற்று பாதிப்பு காணப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

  • காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலை மாற்றம் ஆகியவை தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.     

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT