Red velvet 
செய்திகள்

Red Velvet கேக்கில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் – கர்நாடக உணவுத்துறை ஆய்வில் அதிர்ச்சி!

பாரதி

கர்நாடகாவில் சில பேக்கரிகளில் செய்யப்பட்ட ஆய்வில் அங்கு விற்கும் கேக்குகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல் இருப்பதாக கர்நாடகாவின் உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபக்காலமாக உணவுப் பொருட்களில் கலப்படங்கள் அதிகரித்து வருகின்றன. அதுவும் அவை உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதுதான் கவலையாக உள்ளது. இந்த லிஸ்ட்டில் கோபி மஞ்சுரியன், பானி பூரி, பஞ்சுமிட்டாய் என சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியாவின் ஒரு மாநிலத்தில் இதுபோன்ற ஒரு உணவு உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்துவிட்டால், அடுத்தடுத்த மாநிலங்களும் ஆய்வு செய்து உறுதிசெய்து அந்த மாநிலங்களிலும் தடை செய்து விடுகின்றனர்.

இந்த லிஸ்ட்டில் அடுத்து இடம்பெறும் ஒன்றுதான் சில கேக்குகள். கர்நாடகாவில் சில பேக்கரிகள் அதிகளவு நிறமூட்டிகளை சேர்க்கின்றனர். இது புற்றுநோயை உண்டாக்கக்கூடும் என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ரெட் வெல்வெட் மற்றும் ப்ளேக் ஃபாரஸ்ட் போன்ற கேக்குகளில் அளவுக்கதிகமாகவே நிறம் சேர்க்கின்றனர். இதனால், அதிகம் நிறமூட்டிகள் சேர்க்கும் பேக்கரிகளுக்கு கர்நாடகா உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கர்நாடகா உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், “சுமார் 235 கேக் மாதிரிகளை ஆய்வு செய்தோம். அதில் 223 கேக் மாதிரிகள் பாதுகாப்பாக இருந்தன. ஆனால் 12 கேக்குகளில் செயற்கை வண்ணங்கள் ஆபத்தான அளவில் இருந்தன. குறிப்பாக Allura Red (ஒரு வகை சிவப்பு), சன்செட் மஞ்சள், ஸ்ட்ராபெரி சிவப்பு, எலுமிச்சை மஞ்சள் மற்றும் மரூன் போன்ற செயற்கை நிறங்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடல் ஆரோக்கியயத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, புற்றுநோயைக் கூட உண்டாக்கும்.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து உணவு பாதுகாப்பு வல்லுநர்கள் கூறியதாவது, ”பொதுவாக இதுபோன்ற செயற்கை நிறமிகளை இவ்வளவுதான் பயன்படுத்த வேண்டும் என்று பாதுகாப்புத்துறை ஒரு லிமிட் வைத்திருக்கும். ஆனால், அதையும் தாண்டி பயன்படுத்தும்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் நாம் சாப்பிடும் கேக்கில் கெமிக்கல் கலர் அதிகமாக இருக்கிறதா இல்லை சரியாக இருக்கிறதா என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

மக்கள் இதுபோல இருக்கும் கேக்குகளை விரும்புவதால் செயற்கை வண்ணங்களை அதிகம் சேர்க்கிறார்கள். பேக்கிங் செய்யப்பட்ட பல உணவுகளில் டைட்டானியம் டை ஆக்சைடு உள்ளது. இது நமது உடலுக்கு ஆபத்தானது. இந்தியாவில் இதைப் பயன்படுத்த அனுமதி உள்ள போதிலும் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இது தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்.” என்று கூறுகின்றனர்.

'நாழிகை வட்டில்' என்றால் என்னவென்று தெரியுமா அன்பர்களே!

வேர்க்கடலை சாப்பிடக் கூடாத 5 பேர் யார் தெரியுமா?

பெற்றோரின் விவாகரத்து, குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கும் தெரியுமா? 

'ஹாட்ஸ்பாட்', 'எண்டமிக்' என்பது என்ன தெரியுமா?

மழைக்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? - ஒரு விரிவான ஆய்வு! 

SCROLL FOR NEXT