நமது தமிழ்நாட்டில் கிராமப்புறங்கள் மட்டுமின்றி, நகர்ப்புறங்களிலும் கோயில்களில் தீமிதி விழா நடைபெறுவதைப் பார்த்திருப்போம். ஆண்களும் பெண்களும் விரதமிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். ஏதாவது ஒரு வேண்டுதலின் பொருட்டோ அல்லது நேர்த்திக்கடனாகவோ இந்த தீமிதி நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள். ஆனால், வெற்றி பெற்ற ஒரு தினத்தை நெருப்புத் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஸ்காட்லாந்து நகர மக்கள்.
1803 முதல் 1815ம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற நிகழ்வை, அந்நகர மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். சுமார் 142 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்த பழைமையான நெருப்புத் திருவிழாவில் இதுவரை ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு ஆண், பெண் பாகுபாடுகளைக் கடந்து ஆண்கள் மட்டுமின்றி, பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட இந்த நெருப்புத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தத் திருவிழாவில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு இந்த விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நெருப்புத் திருவிழாவில் போர் வீரர்கள் போல் ஆடை அணிந்து வந்த ஆண்களும் பெண்களும் தங்களது கைகளில் தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர். விழாவில் வண்ணமிகு வானவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன. மேலும், பெரிய நெருப்புத் தூண்கள், டார்ட்லைட் அணிவகுப்புக்கள் மற்றும் எரிமலைக் காட்சிகள் ஆகியவை இந்த தீ திருவிழாவின் முக்கிய அங்கமாகும். திருவிழாவின் முடிவில் டிராகன் வடிவ படகு ஒன்றை தீ வைத்து எரித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர் அந்நகர மக்கள்.