செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா ஆஜராக உத்தரவு!

கல்கி டெஸ்க்

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் அய்யனார் முருகன் என்பவர், ‘நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ம் ஆண்டு மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அந்த மனுவில், ‘மனுதாரர் தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதி பஞ்சாயத்து நிர்வாக இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா என்னை பணியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்து,  எனக்கு வழங்க வேண்டிய பணி உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2016ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி எனக்கு மீண்டும் பணி வழங்கியதோடு, பணி நீக்கம் செய்யப்பட்ட இடைப்பட்ட காலத்துக்கு 25 சதவிகிதம் ஊதியம் வழங்கவும் 2020ம் ஆண்டு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அப்போது மேல் முறையீடு செய்யப்பட்டது. அதிலும் எனக்கு சாதகமான உத்தரவே பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த மனு இன்று நீதிபதி பட்டு தேவானந் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மனுதாரருக்கு 2021ம் ஆண்டு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வேலை செய்யாத காலத்துக்கான 25 சதவீதப் பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இந்த வழக்கில் எதிர்மனுதாரராக IAS ஆட்சிப் பணி மூத்த அதிகாரி ஷிவ்தாஸ் மீனா இருந்தும், தற்போது வரை அவர் நீதிமன்றத்தில் எந்தவித பதில் மனுவோ, விளக்கமோ அளிக்கவில்லை. இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரனைக்கு வருவது அறிந்து 17.7.2023 அன்று அரசு தரப்பில் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டு விட்டதாக அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள  சிவதாஸ் மீனா தற்போது தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது நகராட்சி நிர்வாக குடிநீர் வழங்கல் துறை செயலாளராக உள்ள கார்த்திகேயன் என்பவர் இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்பட்டுள்ள அதிகாரிகளே வழக்கு தொடர்பான விளக்கங்களோ அல்லது அறிக்கையோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவர்களுக்கு பதிலாக எதிர்மனுதாரராக இல்லாத வேறொரு அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது. இதுபோன்ற அடிப்படையான விஷயங்களை அரசு அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், இந்த வழக்கில் நீதிமன்றம் 2020ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஆனால், 10.7.2023 அன்றுதான் நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஆகும். எனவே, இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள அப்போதைய நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் தற்போது தமிழக தலைமைச் செயலாளராக உள்ள சிவதாஸ் மீனா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை வரம் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

கடலுக்கு அடியில் 93 நாட்கள் வாழ்ந்த நபருக்கு 10 வயது குறைந்தது! எப்படி சாத்தியம்?

பல்கலைக்கழகத்துக்கு நிகரானது உங்கள் அனுபவம் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

Isreal Gaza War: ரஃபாவில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம்… வெளியேறும் 8 லட்சம் பாலஸ்தீனர்கள்!

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!

வாத்தைப் போல அலகும், பாம்பைப் போல விஷமும் கொண்ட அபூர்வமான உயிரினங்கள்!

SCROLL FOR NEXT