இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனை படைத்ததை உலகமே கொண்டாடிய நிலையில், இதை சீனாவின் மூத்த விஞ்ஞானி ஒருவர் முற்றிலுமாக மறுக்கிறார்.
கடந்த ஜூலை 14ம் தேதி பூமியிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் மூன்று விண்கலம் சரியாக ஆகஸ்ட் 23ஆம் தேதி திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனை படைத்தது. விண்வெளி துறையில் ஜாம்பவானாக இருக்கும் ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முயன்றபோது நிலவில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், இந்தியாவின் விண்கலம் வெற்றிகரமாக தரை இறக்கியது உலக நாடுகளின் கவனத்தை இந்தியா மீது திருப்பியது. உலகம் முழுவதும் இந்தியாவின் வெற்றியைப் பாராட்டினர்.
இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவில்லை என சீனாவின் மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். ஒரு காலத்தில் விண்வெளி ஆய்வுகளில் ரஷ்யா எப்படி கொடிகட்டிப் பறந்ததோ அதேபோன்ற வளர்ச்சியை தற்போது சீனா எட்டி வருகிறது. நிலாவுக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவது முதல், அங்கிருந்து மண் துகள்களை பூமிக்கு கொண்டு வருவது வரை பல ஆய்வுகளை சீனா செய்து வருகிறது.
சீனா கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மொத்தம் ஏழு நிலவு மிஷன்களை செயல்படுத்தியதில் எதுவுமே தோல்வி அடைந்ததில்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த சீனாவின் நிலவு ஆய்வுத் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் 'உயான ஜியூன்' சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தென் துருவத்தில் தரையிறங்கவில்லை என விமர்சனக் கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார்.
"நிலவின் தென் துருவமானது 90 டிகிரி என வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் 69 டிகிரி தெற்கு அட்சரேகையிலேயே தரையிறங்கியுள்ளது. இதை துல்லியமாகக் கூற வேண்டும் என்றால், நிலவில் தென்துருவத்திலிருந்து 619 கிலோமீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது" என கூறியுள்ளார்.
எனவே இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் குறித்து சீன விஞ்ஞானி இத்தகைய விமர்சனக் கருத்தை கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.