செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து எதிரொலி: செப்டம்பர் மாதம் வரை விமானச் சேவைக்கு நேபாளத்தில் கட்டுப்பாடு!

முரளி பெரியசாமி

மயமலை பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து, அத்தியாவசியம் இல்லாத விமான சேவைகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.

கடந்த செவ்வாயன்று ஐந்து மெக்சிகோ சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நேபாள ஹெலிகாப்டர் ஒன்று, இமயமலை பகுதியில் நொறுங்கி விழுந்தது. அதில் நேபாள நாட்டைச் சேர்ந்த விமானி உட்பட பயணம் செய்த ஆறு பேருமே உயிரிழந்தனர். எவரெஸ்ட் சிகரப் பகுதியைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போதுதான், அந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இப்படி சுற்றுலா வரும் பயணிகளுக்காக இயக்கப்படும் சாகச விமான சேவைகளின்போது, மேகங்களாலோ வேறு சீரற்ற வானிலையாலோ சிறு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. கடந்த முப்பது ஆண்டுகளில், நேபாளத்தின் மிக மோசமான விபத்தாக, கடந்த ஜனவரியில் 71 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் கருதப்படுகிறது. சுற்றுலா நகரமான பொக்காராவுக்கு அருகில் விமானம் தாழப் பறந்துகொண்டு இருந்தபோது, குறிப்பிட்ட அந்த விமானம் மலையில் விழுந்து நொறுங்கியது.

இதன் பிறகு தற்போது கடந்த செவ்வாயன்று விபத்துக்குள்ளான சிறிய வகை ஹெலிகாப்டரை, மனங் ஏர் எனும் நீண்ட கால நிறுவனம் இயக்கியது. ஆனாலும் இமயமலையின் உயரமான சிகரங்களை மெக்சிகோ பயணிகளுக்கு சுற்றிக் காண்பித்துவிட்டு திரும்பி வந்தபோது லம்ஜுரா வனப்பகுதியில் அது விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தை அடுத்து, நேபாள குடிமை வான்போக்குவரத்து ஆணையம், நேற்று புதிய தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், “ அத்திவாசியம் அல்லாத வான்பறப்புகள், குறிப்பாக மலைச்சிகரப் பகுதிகளுக்கான பறப்புகள், வான்பரப்பில் இன்னொரு விமானத்துக்கு உதவும் பறப்புகள், ஹெலிகாப்டர் மூலம் மலர்களைத் தூவுதல் ஆகியவற்றுக்கு வரும் செப்ட்ம்பர் மாதம்வரை தடைவிதிக்கப்படுகிறது.” என்று நேபாள வான்போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

நேபாளத்தைப் பொறுத்தவரை, ஆண்டின் மையப் பகுதியான ஜூன் முதல் செப்டம்பர்வரை பருவகாலம் ஆகும். இந்தக் காலகட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள தடை உத்தரவால் சாகச சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைவார்கள். மலைச் சிகரப் பார்வைச் சுற்றுலா வான் பறப்புகள் மூலம் கிடைத்துவரும் வருவாயும் கணிசமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, செவ்வாயன்று நிகழ்ந்த விபத்து குறித்து புலன்விசாரணை மேற்கொள்ள சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

SCROLL FOR NEXT