ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் உள்ள இரண்டு எரிமலைகள் வெடித்து எரிமலைக் குழம்பை உமிழ்ந்து வரும் நிலையில், இன்னும் பெரிய வெடிப்புகள் வர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.
மாஸ்கோ நகரின் கிழக்கே சுமார் 6,600 கிலோமீட்டர்கள் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் பரவியுள்ள ஒரு தீபகற்பத்தில் சுமார் 30 ஆக்டிவ் வல்கனோக்கள் உள்ளன. அதாவது வெடிக்கும் இளம் எரிமலைகளாக உள்ளன.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று பயங்கர நிலநடுக்கம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்குள்ள இரண்டு எரிமலைகள் தற்போது உயிர்பெற்று, பூமிக்கு அடியில் உள்ள வெப்ப குழம்புகள் கரும்புகையுடன் எரிமலை குழம்புகளாக வெடித்து சிதற தொடங்கியது.
அதில், 16,000 அடிகள் உள்ள க்ளூசெவ்ஸ்காயா சூப்கா என்ற எரிமலை, யூரேசியா பகுதியின் மிக உயரமான ஆக்டிவ்வாக இருக்கும் எரிமலையாக உள்ளது.
சுமார் 5,000 மக்களைக் கொண்ட நகரமாக கருதப்படும் க்ளூச்சி நகரம் இரண்டு எரிமலைகளுக்கு இடையே, அமையப் பெற்றுள்ளது. இந்த நகரம் ஒவ்வொரு எரிமலையிலிருந்தும், 30-50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பொதுவாக, பசிபிக் பகுதிகளில் அமைந்துள்ள எரிமலையை ரிங் ஆப் பயர் எனவும் குறிப்பிடுவர். இங்குள்ள எரிமலைகள் பெரும்பாலும் நிலத்தட்டுகள் இடையே அமைந்திருக்கும். புவியின் தட்டுகள் நகரும்போது அந்த நெருப்பு குழம்புகள் வெளியே வரும்.
இந்நிலையில், தற்போது இரண்டு எரிமலைகள் வெடித்து எரிமலைக் குழம்பை உமிழ்ந்து வரும் நிலையில், நிலநடுக்கத்தால் இன்னும் அதிகப்படியான நெருப்பு குழம்புகள் வெடித்து பூமிக்கு மேலே வரவாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், அதைச் சுற்றி அமைந்துள்ள நகரங்களின் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.