கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே சமீப காலமாக கடும் பனிப்போர் நிலவி வருகிறது.
சமீபத்தில் அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜஸ்ரீ, யுஜிசி நிபந்தனைகளை மீறி நியமிக்கப்பட்டதாக கூறி சமீபத்தில் அவரை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டார்.
நிதியமைச்சர் பாலகோபால் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு கேரளாவின் அருமை தெரியாது என்று கவர்னரை மறைமுகமாக அவர் தாக்கிப் பேசினார்.
இது குறித்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேற்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு 5 பக்க கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், ‘நிதியமைச்சர் பாலகோபால் என்னுடைய விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டு வருகிறார். என்னை தரக்குறைவாக விமர்சிப்பதோடு மட்டுமில்லாமல், நாட்டையும் அவமானப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் முதல்வர் பினராய் விஜயன், கவர்னரின் கோரிக்கையை உடனடியாக நிராகரித்து விட்டார். இது தொடர்பாக அவர் கவர்னருக்கு உடனடியாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அமைச்சர் பாலகோபால் கவர்னரை அவமானப்படுத்தும் வகையில் எதுவும் பேசவில்லை. அவரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே இதுபோன்று பனிப்போர் தொடர்ந்து வருவது கேரளா அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.