விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக என்.சங்கரய்யா உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 102.
தோழர் சங்கரய்யாவின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல், சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பலர் அஞ்சலி தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்தார். அவருக்கு சளி தொந்தரவு, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்நிலையில் அவரது மறைவு அக்கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தியாகி சங்கரய்யா 1922 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்தார். தூத்துக்குடியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பயின்றார். பாரதியார் கவிதைகள் இவருக்கு பெரும் உந்துசக்தியாக விளங்கின. புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களையும் ஆழ்ந்து கற்றார். சிறையில் காமராஜர், ப.ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்தார். விடுதலையாகி வெளியே வந்த பிறகு, பொதுவாழ்க்கைக்குத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உருவான போது இருந்த 36 தலைவர்களில் ஒருவர் சங்கரய்யா. 1977, 1980 தேர்தல்களில் மதுரை கிழக்கு தொகுதியில் வென்று எம்.எல்.ஏ. ஆனவர் சங்கரய்யா. 1967-இல் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சென்னை மாணவர் சங்கத்தில் இணைந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர் சங்கரய்யா. காமராஜர், சஞ்ஜீவரெட்டி போன்றோருடன் சிறைவாசம் அனுபவித்தார் சங்கரய்யா. சென்னை மாணவர் சங்கத்தில் இணைந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர் சங்கரய்யா என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது உடல் குரோம்பேட்டை இல்லத்தில் சில மணி நேரம், குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின், சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில் உடல் வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு சங்கரய்யாவின் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.