செய்திகள்

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு!

கல்கி டெஸ்க்

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும், பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர். ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி உள்ளிட்ட 11 பேர் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசாரால் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தரப்படும் எனக்கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து,ரூ. 2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

மோசடி செய்யப்பட்ட பணத்தில் இதுவரை ரொக்கமாக 5 கோடியே 69 லட்சம் ரூபாயும், 1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் முடக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களின் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்களும் கண்டறியப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. அதேபோல அண்மையில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி ஹரிஷையும் 4 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையிலும், ஆருத்ரா மோசடியில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் தொடர்பு குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாஜக-வில் ஓ.பி.சி பிரிவு மாநில துணைத் தலைவராக இருந்து வரும் ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா மோசடி வழக்கில் இருந்து தனக்கு வேண்டப்பட்டவர்களை காப்பாற்ற உதவி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் மற்றும் கைது செய்யப்பட்ட ரூசோ ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்.கே.சுரேஷ் வங்கிக் கணக்கிற்கு கோடிக் கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து ஆர்.கே.சுரேஷுக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவரது வீட்டிற்கு சென்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசை வழங்கி உள்ளனர்.

ஸ்படிக மாலையால் கிடைத்த விஷ்ணு சஹஸ்ரநாமம்!

‘கத்புட்லி’ பொம்மலாட்டம் பற்றித் தெரிந்து கொள்ளுவோமா?

நல்ல சகுனம், கெட்ட சகுனம் எவை தெரியுமா?

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவுகளை இப்படிச் சாப்பிட்டு பாருங்களேன்!

க்ளூடாமைன் அதிகமுள்ள உணவுகள் தெரியுமா?

SCROLL FOR NEXT