செய்திகள்

தொடரும் கள்ளச்சாராய வேட்டை - 1558 பேர் கைது!

ஜெ. ராம்கி

கள்ளச்சாராய சாவுகளை தொடர்ந்து தமிழக அரசு தேடுதல் வேட்டையை ஆரம்பித்திருக்கிறது. அதிரடியாக காவல்துறை அதிகாரிகள் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுவிற்பனை தங்கு தடையின்றி டாஸ்மாக் மூலம் கிடைத்துவருகிறது. அரை கி.மீ தூரத்திற்கு ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தாலும் கள்ளச்சாராயம் பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. நேற்று விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கிராமத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 66 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து வந்த பின்னர் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.,

கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விழுப்புரம், செங்கல்பட்டு மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி-க்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப்பை பணியிட மாற்றம் செய்து முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இதையெடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை ஆரம்பமானது.

இரண்டு நாட்களாக தொடர்ந்து வரும் வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 1,558 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 19 ஆயிரத்து 028 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டவற்றில் 4 ஆயிரத்து 943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16 ஆயிரத்து 493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கள்ளச்சாராயம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனமும், ஏழு இரண்டு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. நடப்பாண்டில் 55 ஆயிரத்து 474 சாராய வழக்குகள் பதிவு செய்யட்டு 55 ஆயிரத்து 173 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளதாகவும் அதில் 4 ஆயிரத்து 534 பேர் பெண்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயத்திற்கு எதிராக அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைள் தொடர்கின்றன. கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்தவதுற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார். கள்ளச்சாராய மரணங்களுக்கு உடனடியாக பத்து லட்ச ரூபாய் நிவாரணம் அளித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூற முதல்வர் அவசரப்பட்டதும், காவல்துறை

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது, சாராய வேட்டையை துரிதப்படுத்தியதும் அறிவாலய வட்டாரங்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்!

பெண்களுக்கு கைமேல் பலன் தரும் கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு!

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து… 8 பேர் பலி!

தொலைதூரப் பயணங்கள் முடிவதில்லை… தொடரும்…!

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT