இந்தோனேசியாவில் மலை வாழிடமான புங்காங் பகுதியில் வரும் சுற்றுலா பயணிகளை கவர தற்காலிக திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த தாற்காலிக திருமணங்கள் சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை நீடிக்கலாம். பயணிகள் சொந்த நாடு திரும்புகையில் இந்த திருமணங்கள் ரத்து செய்யப்படும். அதன் பின்னர் அவர் அந்த பெண்ணிற்கு சொந்தம் கொண்டாட முடியாது. இந்த திருமணத்தை நடத்தி வைக்க சில ஏஜென்சிகள் உள்ளன.
முதலில் பெண்களின் புகைப்படங்களை சுற்றுலா பயணிகளுக்கு அனுப்பி அறிமுகம் செய்கிறார்கள். பின்னர் பிடித்த பெண்ணை பேசி அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது 'சீனாவில் நடைபெறும் ஒருநாள் திருமணம் போல வெறும் மதச் சடங்குகளுக்காக நடத்தப் படுவதில்லை'. மாறாக சுற்றுலா பயணிகளுக்கு ஒரு தாற்காலிக மனைவியாக அனைத்து சேவைகளையும் வழங்கும் பொருட்டு இந்த திருமணம் செய்யப்படுகிறது.
நிக்காஹ் முத்தாஹ் என்று ஷியா இஸ்லாமிய முறைப்படி இந்த திருமணம் நடைபெறும். அதன் பின் அந்த ஆண் பயணியுடன் பெண் தங்கி மனைவிக்கு உண்டான அனைத்து கடமைகளையும் செய்வார். அவருக்காக சமைப்பது, துவைப்பது, அவருடன் இணைந்து சுற்றுலா செல்வது, இன்பம் துய்ப்பது என மனைவியின் முழு உரிமையையும் கொடுத்து விடுவார். இறுதியாக பயணி ஊர் திரும்பும் முன் விவாகரத்தும் செய்யப்படும். இந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்றாலும் அவர்கள் மனசாட்சிக்காகா ஒரு சம்பிரதாயத்தை கடைப் பிடிக்கின்றனர். பெரும்பாலும் மத்திய ஆசியா, அரபு நாட்டு பயணிகள் இந்த முறையில் பெண்களை சுரண்டுகின்றனர்.
அரபு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மேற்கு இந்தோனேசியாவின் புங்காங் பகுதியில் இந்த நிகழ்வு பரவலாக உள்ளது. பல பயணிகள் மலை வாசஸ்தலமான கோட்டா புங்காவில் ஏஜென்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக திருமணங்கள் மூலம் உள்ளூர் பெண்களை சுரண்டுகின்றனர்.
இது பற்றி ஒரு அமெரிக்க பத்திரிக்கையின் அறிக்கையில்
'இன்பத் திருமணங்கள்' என்று அழைக்கப்படும் இந்த சர்ச்சைக்குரிய திருமணங்கள், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு இலாபகரமான தொழிலாக உருவெடுத்துள்ளது. ஆரம்பத்தில், இந்தோனேஷிய பெண்களின் குடும்ப உறுப்பினர்களே பணத்திற்காக சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் வீட்டு பெண்களை அறிமுகம் செய்து வைத்து தாற்காலிக திருமணத்தை நடத்தி வைத்தனர். தற்போது இதற்காக பல நிறுவனங்கள் வேலை செய்கின்றன.
இந்தோனேசிய இளம் பெண் சகயா, தற்காலிக மனைவியாக தனக்கு ஏற்பட்ட வேதனையான அனுபவத்தைப் பகிர்கையில் மத்திய கிழக்கு சுற்றுலா பயணிகளை 15 முறை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அவரது முதல் கணவர், 50 வயதான அரேபியர். அவர் இந்த திருமணத்திற்காக ₹71,000 குடுத்தாலும் அதில் பாதியை ஏஜென்சிகள் சுருட்டி விட்டனர். 5 நாட்கள் கழித்து அந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது. ஒரு திருமணத்திற்கு ₹20,000 முதல் ₹40,000 வரை தனக்கு கிடைப்பதாகவும் அது தனது வயதான தாத்தா பாட்டியை பராமரிக்க தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
மற்றொரு பெண் நிஷா 20 தற்காலிக திருமணங்களுக்குப் பிறகு. ஒரு இந்தோனேசிய குடிவரவு அதிகாரியை காதலித்து மணந்துள்ளார். தனது புதிய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழும் இவர் இனி ஒரு போதும் கடந்த கால வாழ்க்கைக்கு திரும்ப மாட்டேன் என்று உறுதி கொண்டுள்ளார்.
நிக்காஹ் முத்தாஹ் என்றும் அழைக்கப்படும் இந்த தற்காலிக திருமணங்கள் அவர்கள் கலாச்சாரத்தில் பல காலம் வேரூன்றி இருந்தாலும் தற்காலத்தில் ஆதரிக்க முடியாது என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் பெண்கள் சுரண்டப்படுவதாகவும் அவர்களின் எதிர் காலத்தையும் இது கேள்வி குறியாக்கும், இது பாதுகாப்பு மற்றும் பெண்களின் உரிமையை பறிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.