குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்த அமைச்சர் 
செய்திகள்

‘பண்பாடு - ஒரு மீள்பார்வை’ சென்னையின் தொன்மை பேசும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார் அமைச்சர்!

கல்கி டெஸ்க்

சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் இன்று (28.08.2024) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அருங்காட்சியகங்கள் துறை சார்பில் நடைபெற்ற பெருநகர சென்னையின் பெருமை பேசும் கொண்டாட்டங்கள் தொடர்பான ‘பண்பாடு - ஒரு மீள்பார்வை’ என்ற கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்தக் கருத்தரங்கில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, “சென்னை, அரசு அருங்காட்சியகத்தில் பெருநகர சென்னையின் பெருமையைப் பேசும் விதமாக ‘சென்னை தினம்’ கொண்டாடப்பட்டு வருகின்றது.  பொதுவாக, சென்னை தினம் என்பது,1639ம் ஆண்டு ஆகஸ்டு 22ம் நாள் தற்போது புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள நிலப்பரப்பை ஆங்கிலேயர்கள் வாங்கினார்கள். அந்த நாளே இதுவரை சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னைக்கு 385வது பிறந்த நாளை பெருமையாக அருங்காட்சியகம் கொண்டாடி வருகிறது. இதற்காக ஆகஸ்டு 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை சிறப்புக் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்புக் கண்காட்சியில் சென்னை 385 ஆண்டு மட்டும் பழைமையானதல்ல லட்சக்கணக்கான ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதை மெய்ப்பிக்கும் விதமாக லட்சக்கணக்கான ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராபர்ட் ஃபுரூஸ் ஃபுட் கண்டெடுத்த பழைய கற்கால கருவிகள், இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கீழடி அகழாய்வில் கிடைத்த மட்கலன்கள் ஆகியன இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் எம்டன் கப்பல் சென்னை மீது எறிந்துவிட்டுச் சென்ற வெடிகுண்டுகளின் எச்சங்கள் மற்றும் இசைக் கருவிகள், இன்றைய தலை முறையினர் அறிந்திராத தோலா, எடைக் கற்கள். மரக்கால், படி போன்ற அளவைகள் அழகாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாட்கள், பீரங்கிக் குண்டுகள் ஆகியன சிறப்பு மிக்கவை.

இனிய தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என மூன்றாகப் பிரிந்திருப்பது போல சென்னை தின கொண்டாட்டங்கள் கண்காட்சி வடிவிலும், கலை நிகழ்ச்சிகள் வடிவிலும், கருத்தரங்கு வடிவிலும் மூன்று வகையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் சென்னையின் பெருமையை போற்றும் விதமாக ‘பண்பாடு - ஒரு மீள் பார்வை’ என்ற தலைப்பில் சென்னையின் தொன்மை பேசும் ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கத்தில் தொல்லியலாளர்கள், நாணயவியல் அறிஞர்கள், கட்டடக் கலை வடிவமைப்பாளர்கள் கலந்துக் கொண்டு தங்கள் துறை அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்துகொள்ள வந்துள்ளனர்” என்று பேசினார்.

கருத்தரங்கில் பேசும் அமைச்சர்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ‘‘அருங்காட்சியகத்தில் கடந்த 20ம் தேதியிலிருந்து வருகின்ற 29ம் தேதி வரை கண்காட்சி நடைபெற்று வருகிறது. நம்முடைய பெருமைக்குரிய சென்னை மாநகரம் எப்போது துவங்கப்பட்டது, அதனுடைய வரலாறும், அதேநேரத்தில், இந்தியாவிலேயே இரண்டாவது அருங்காட்சியகமாக சிறந்து விளங்கக்கூடிய, பெருமை பேசக்கூடிய வகையில் எழும்பூரில் உள்ள சென்னை அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது.

வரலாற்றில் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் மாணவச் செல்வங்கள் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்வாக இந்த கருத்தரங்கு துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் இக்கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல கலை, பண்பாடு என்பது தமிழருடைய பண்பாடு, இந்தியாவிலேயே இரண்டாவதாக சென்னை அருங்காட்சியகம் விளங்கிக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் கவிதா ராமு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT