செய்திகள்

’உயிரைக் காக்கும் தண்ணீரை வீணாக்காதீர்கள்’ முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

கல்கி டெஸ்க்

லக உயிர்களின் அவசியத் தேவைகளில் ஒன்று தண்ணீர். இயற்கைக் கொடைகளில் ஒன்றான தண்ணீரை சேமிப்பது மற்றும் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக 1993 முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 உலக தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,  

உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது தண்ணீர். இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்த அளவுக்கு உயர்ந்தாலும் மாறினாலும், மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை மாறாது. அதனால்தான். ’நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். தமிழ் நிலமானது தண்ணீரை தனது பண்பாட்டுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது. தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம், ’நிலம், தீ, நீர், விளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்’ என்று சொல்கிறது.

தண்ணீர் என்று சொல்லாமல் அமிழ்தம் என்று சொன்னவர் திருவள்ளுவர். மனித உடலில் தண்ணீரின் அளவு கூடினாலும் குறைந்தாலும் தீமை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர். திருமந்திரமும், தேவாரமும், திருவாசகமும் தண்ணீரின் அவசியத்தை அழகு தமிழில் சொல்கின்றன. நீர் நிலைகளின் அளவை பெயர் வைத்தவர் தமிழர். குளம், குட்டை, ஏரி, ஊருணி. கன்மாய், நீரோடை, ஆறு, அருவி, கடல் என்று பிரித்து பெயர் சூட்டினர் தமிழர்கள். எல்லாமே நீர் உள்ள இடம்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டது.

கடல் நீரை முன்னீர் என்றும் ஆற்றும் நீரை நன்னீர் என்றும் குடிநீரை இந்நீர் என்றும் குளிர்ந்த நீரை தண்ணீர் என்றும் நீரின் தன்மைக்கேற்ப பெயர் சூட்டிய இனம் தமிழ் இனம். உடம்பை குளிர்வித்தலே குளித்தல் ஆனது. தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்பது தமிழ் பழமொழி. நமது உடலின் அனைத்து உறுப்புகளும் முறையாகச் செயல்படுவதற்கு தண்ணீர் மிக மிக அவசியம். உணவின்றி கூட பல நாட்கள் இருக்க முடியும். நீர் இன்றி வாழ முடியாது. இத்தகைய உயிர் நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும். அதாவது, நம்மைக் காக்கும் நீரை வீணாக்கக் கூடாது, நீரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நீர் நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும். நீர் நிலைகளை தூர்வாரி வைத்திருக்க வேண்டும்.

இன்றைக்கு ஒரு நாட்டின் வளம் என்பது நீர் வளமாக, இயற்கை வளமாக கணக்கிடப்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். புவி வெப்பமயமாகி வருகிறது. இதில் இருந்து நம்மைக் காப்பது தண்ணீர்தான். நீரில்லையேல் உயிர் இல்லை என்பது உணர்ந்து தண்ணீரை காப்போம். தாய் நிலத்தை காப்போம்’ என்று அந்த வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள இனிப்பான ஆரோக்கிய நன்மைகள்!

நாய்கள் ஏன் செருப்பை அடிக்கடி கடிக்கின்றன தெரியுமா?

SCROLL FOR NEXT