தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி நேற்றோடு ஓய்வு பெற்றிருக்கிறார் வெ.இறையன்பு ஐஏஎஸ். இந்த நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது சார்பில் வெ.இறையன்புவுக்கு தனது ட்விட்டர் பதிவின் மூலம் ஒரு கோரிகையை வைத்து இருக்கிறார்.
அந்தக் கோரிக்கையில்அவர், ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளராகச் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் வெ.இறையன்பு அவர்கள், வேறு எந்த அரசு பதவியையும் ஏற்கப் போவதில்லை என்றும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்துக்காகவும் தாம் உழைக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். அவர் எடுத்திருப்பது மிகவும் சரியான முடிவு. அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.
தமிழ்நாட்டின் இளைஞர் சமுதாயம் மது, புகையிலை, போதைப் பொருட்கள் ஆகிய முப்பெரும் அரக்கர்களிடம் சிக்கிச் சீரழிந்து வருகிறது. இந்த முப்பெரும் தீமைகளிடமிருந்து இளைஞர்களைக் காக்க, அரசியல் ரீதியாக பாட்டாளி மக்கள் கட்சி போராடிக் கொண்டிருக்கிறது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கும் வெ.இறையன்பு மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களைக் காப்பதற்காக அவர் வழியில் பரப்புரை செய்யும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்; பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது அவரை வளர்த்தெடுத்த தமிழ்ச் சமூகத்துக்கு அவர் செய்யும் கைம்மாறாக அமையும்” என்று தனது பதிவின் மூலம் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.