முதலமைச்சர் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி 
செய்திகள்

‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி!

கல்கி டெஸ்க்

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (12.8.2024) சென்னைப் பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு‘ நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும், மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2024ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

கடந்த மே, 2022ம் ஆண்டு முதல் ஜூன் 2024 வரை மாநிலம் முழுவதும் 266 மாவட்ட அளவிலான NARCO ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், முதலமைச்சரின் ஆணைப்படி, மாநிலம் முழுவதும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 391 குழுக்கள் கடந்த நவம்பர் 2023ல் உருவாக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், கடந்த ஜூலை 2024 வரையில், 19,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 177 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்படி குற்றவாளிகளிடமிருந்து சுமார் 13.16 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதுடன் 8,650 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பான பணியாற்றியதற்காக 2024ம் ஆண்டிற்கான முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத், சேலம் மத்திய புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் பி.ஜகன்னாதன், சென்னை மத்திய புலனாய்வுப் பிரிவு சார்-ஆய்வாளர் கே.ராஜ்குமார், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலைய  சிறப்பு சார்-ஆய்வாளர் ஆர்.அருண், இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய முதுநிலை காவலர் ஆர்.துரை ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.

மேலும், இன்று மாநிலம் முழுவதும் கைப்பற்றப்பட்ட சுமார் 13,775 கிலோ போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் செங்கல்பட்டு, சேலம், தஞ்சை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தகுந்த பாதுகாப்புடன் எரித்து அழிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சௌ.டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், அமலாக்கப் பணியகம் - குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் அ.அமல்ராஜ் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT