சில தினங்களுக்கு முன்னர் தைவானில் தீவிரமான நிலநடுக்கம் ஏற்பட்டு உயிர்சேதங்கள், பொருட்சேதங்கள் அதிகமாக இருந்தன. இதனையடுத்து நேற்று நள்ளிரவில் காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்தாண்டு சமீபத்தில் உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஜப்பானின் தைவானில் நில நடுக்கம் ஏற்பட்டு 9 பேர் பலியாகினர். மேலும் சில கட்டடங்கள் முற்றிலுமாக விழுந்தன. இதனையடுத்து நேற்றைய தினம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பகுதியிலும் நியூ ஜெர்ஸி பகுதியிலும் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூயார்க் பகுதியில் 4.8 ரிக்டர் அளவும் நியூ ஜர்ஸியில் 5.5 ரிக்டர் அளவும் பதிவாகின. கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அதேபோல் அந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள ப்ரூக்லின், பென்சில்வானியா, பால்டிமோர், பிலடெல்பியா, கனெக்டிகட் போன்ற இடங்களிலும் அதிர்வுகள் ஏற்பட்டன.
இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷ்த்வர் என்ற பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர். இந்த அதிர்வை ரிக்டரில் கணக்கிட்டு பார்க்கையில் 3.2 என்பது தெரியவந்துள்ளது. நிலநடுக்கம் சக்தி குறைந்தது என்பதாலும், இரவில் ஏற்பட்டது என்பதாலும், அவ்வளவாக பாதிப்புகள் எதுவுமில்லை.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிகளில் அதாவது சரியாக நள்ளிரவு 1.30 மணியளவில் ராஜஸ்தான் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவு 3.7 ஆகும். அதாவது காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும்.
இந்த இரண்டு நிலநடுக்கங்களுமே பூமிக்கு கீழ் சரியாக 10 கிமீ தொலைவில் ஏற்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் இதுபோல் அதிக நிலநடுக்கங்கள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கும். பிப்ரவரி மற்றும் ஜனவரி மாதங்களில் கூட லேசான நிலநடுக்கம் காணப்பட்டன. ஜனவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் 3.9 ரிக்டர் அளவு கொண்டது. அதாவது, நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைவிட மிகவும் அதிகமானது. ஆகையால், இந்தமுறை அவ்வளவாக பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், மக்கள் மிகவும் அச்சமடைந்துவிட்டனர் என்பதால், சிறிது நேரம் அந்த இடங்களில் பதற்றம் நிலவியது.