கனடாவில் உள்ள டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானத்தின் விமான என்ஜின் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
விமான விபத்துகள் தற்போது அதிகமாகி வருகிறது. இது வான்வழி பயணம் என்பதால், எப்போதும் பெரிய அளவில் பாதுகாப்பு நெறிமுறைகள் இருக்கும். ஆனால், சமீபக்காலமாக அந்த பாதுகாப்புகளையும் மீறி விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் என்னவென்றே தெரியவில்லை.
வெளிப்படையாக பார்க்கும்போது அனைத்தும் தொழில்நுட்பக் கோளாறாகவே உள்ளது. ஆனால், போலீஸார் விசாரணைக்குப் பிறகே மர்மங்கள் அவிழ்க்கப்படுகின்றன. சில சமயம் அந்தக் காரணங்கள் மூடி மறைக்கப்படுவதும் உண்டு. ஆனால், இந்த சம்பவம் கவனம் குறைவால் ஏற்பட்டதா? அல்லது விமானத்தின் தொழில்நுட்ப கோளாறா என்பது தெரியவரவில்லை.
டொராண்டோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 389 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் கிளம்பிய விமானம் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டது. புறப்படுவதற்கு முன்னர் எந்த அறிகுறியும், பணியாளர்களிடம் பதட்டமும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால், விமானம் புறப்பட்ட சில நொடிகளில் என்ஜின் வெடித்து சிதறி இருக்கிறது.
இதனால், விமானத்தின் பைலட் உடனே செயல்பட்டு விமானத்தை டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார். இதனால், பணியாளர்கள் மற்றும் பயணிகள் என யாருக்குமே எந்தக் காயமும் ஏற்படவில்லை. சில நொடிகள் தாமதித்து இருந்தாலும், பெரிய அளவு சேதம் ஏற்பட்டிருக்கும்.
அதேநேரம் போயிங் ரக விமானத்தில் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனால் விமான நிறுவனங்கள் போயிங் ரக விமானங்களை வாங்கவே தயக்கம் காட்டி வருகின்றனர். இந்தச் சூழலில் தான் இந்த விபத்தும் அரங்கேறி இருக்கிறது. இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இருப்பினும், அதைக் கண்டறியத் தீவிர விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏர் கனடா நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமே இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்து குறித்து ஏர் கனடா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விமானம் வழக்கம் போலத் தரையிறங்கியது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்ட போதிலும் அதற்கான தேவை ஏற்படவில்லை." என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.