பாலிவுட் பிரபல நடிகை வித்யா பாலன் பெயரில் இணையத்தில் ஒரு கும்பல் போலி கணக்கு திறந்து பணம் பறித்து வருகின்றனர். இதனால் வித்யா பாலனின் உறவினர்கள், நண்பர்கள் பலர் ஏமாற்றம் அடைந்து பணத்தை இழந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் பலரின் வளர்ச்சிக்கு உதவுவதோடு பல திருட்டுகளையும் சிக்கவிடாமல் பாதுகாத்தும் வருகிறது. அதனால் இப்போது இணைய வழி திருட்டு அதிகமாகி வருகிறது. சமீபத்தில் கூட இந்திய ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை பாகிஸ்தான் ராணுவம் இணையத்தில் போலி கணக்கு திறந்து, இந்தியாவை சேர்ந்த ஒருவரை ஏமாற்றி வாங்கியது. அதேபோல்தான் இப்போது வித்யா பாலனின் உறவினர்களிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளது.
அந்த போலி கும்பல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலி கணக்கு திறந்ததோடு, போலி இமெயில், வாட்ஸ் அப் என அனைத்தையும் திறந்திருக்கிறார்கள். பின் வித்யா பாலனுக்கு தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் எனத் தெரிந்த அனைவரிடமும் பணம் கேட்டு வருகின்றனர். இது தொடர்பாக வித்யா பாலன் மும்பை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதாவது, “எனது பெயரில் இன்ஸ்டாகிராம், இமெயில், வாட்ஸப் திறந்து எனக்கு தெரிந்த அனைவரிடமும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி பணம் கேட்கின்றனர். என்னுடன் இதற்கு முன்பு பணியாற்றிய டிசைனர் ஒருவருக்கும் இதுபோன்ற மெசேஜை அனுப்பியுள்ளனர்.
அவரிடம் உங்களுடன் சேர்ந்து பணியாற்ற தனக்கு விருப்பம் என்றும், உங்களுக்கும் விருப்பம் என்றால் மேற்கொண்டு பேசலாம் எனவும் கூறியுள்ளனர். அந்த டிசைனர்தான் எனக்கு இந்த செய்தியைக் கூறி உஷார் படுத்தினார். இது மட்டமல்லாமல் இமெயில் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் எனது நண்பர்களைத் தொடர்புக் கொண்டு பணம் கேட்பதாகவும் எனக்கு தகவல் வந்தது” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து போலிஸார் சைபர் க்ரைம் பிரிவில் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்போது இதுபோன்று பிரபலங்கள் பெயரில் கணக்கு திறந்து ஏமாற்றி வரும் சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.